

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) குறைக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மற்றும் கடந்த மே மாதத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோலிய பொருட்களின் விலை கணிசமாக குறைந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை.
இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்களவையில் காங்கிரஸ், திமுக,திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்றுஅமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறைஅமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.27,276 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2021 முதல் 2022-ம் வரையிலான காலத்தில் இந்தியாவில் 2% அளவுக்கு மட்டுமே பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை அதிகரிக்கப்பட்டது.
சமானிய மக்களின் நலன் கருதி கடந்த ஆண்டு நவம்பர், இந்த ஆண்டு மே மாதத்தில் இருமுறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோல், டீசல்மீதான வாட் வரியை குறைத்தன. ஆனால் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் வரி குறைக்கப்படவில்லை.
நாட்டின் சமையல் எரிவாயு தேவையில் 60% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகமாகஇருந்தாலும் இந்தியாவில் சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை அதிகமாக உயர்த்தப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார். மத்திய அமைச்சரின் விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.