

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வியாழக்கிழமை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 879 புள்ளிகள் சரிந்து 61,799 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 245 புள்ளிகள் சரிந்து 18,414 ஆக இருந்தது.
வியாழக்கிழமை காலை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 269.36 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 62,408.55 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 80.65 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,579.65 ஆக இருந்தது.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக நாள் தொடரும் என்று தெரியவந்ததைத் தொடர்ந்து அவை இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தன. இதனால், இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன. அனைத்து துறை பங்குகளும் சரிவிலேயே இருந்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 878.88 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,799.03 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 245.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,414.90 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல்ஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.