Last Updated : 15 Dec, 2022 03:46 PM

 

Published : 15 Dec 2022 03:46 PM
Last Updated : 15 Dec 2022 03:46 PM

நாமக்கல்லில் இருந்து முதன்முறையாக மலேசியாவுக்கு 54,000 முட்டைகள் ஏற்றுமதி

மலேசிய ஏற்றுமதி தொடர்பாக நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் கே.சிங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நாமக்கல்: “நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முதன்முறையாக முட்டை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது. சோதனைக்காக 54,000 முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது” என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்தியாவில் நாமக்கல் மாவட்டம்தான் பயோ செக்யூரிட்டியில் முதன்மையாக உள்ளது. கோழிப் பண்ணைகளை எப்படி பராமரிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து சங்கம் சார்பில் வழங்கி வருகிறோம். அதனால் நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் பறவைக் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பே இல்லை. சிறந்த முறையில் கோழிப் பண்ணைகள் பராமரிப்பதே இதற்கு காரணமாகும்.

நாமக்கல்லில் இருந்து துபாய், மஸ்கட், கத்தார், ஆப்பிரிக்க நாடுகள், மாலத் தீவுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. முதன்முறையாக மலேசியாவுக்கு நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது. தற்போது 54 ஆயிரம் முட்டைகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஏற்றுமதி உறுதியானால் வாரம் ஒன்றுக்கு 20 கண்டெய்னர்கள் மூலம் 1 கோடி முட்டைகள் வீ்தம் மாதத்திற்கு 4 கோடி முட்டைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

முட்டை பவுடர் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் 7 கோழிப் பண்ணைகள் தனி மண்டலாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 10 பண்ணைகள் தனி மண்டலமாக்கப்பட உள்ளது. இந்த பண்ணைகளில் இருந்து மட்டும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு முட்டை அனுப்பும் பத்து தினங்களுக்கு முன்னர் எந்த பண்ணையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறதோ அந்தப் பண்ணையில் உள்ள முட்டை கால்நடை பராமரிப்புத் துறையிடம் வழங்கப்படுகிறது.

அங்கு ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்ட பின்னரே முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் பறவைக் காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கால்நடை பரமாரிப்புத் துறை ஆய்வு செய்து வருகின்றனர். முட்டை ஏற்றமதியாளர்கள் பட்டியல் அபீடாவிடம் (அக்ரிகல்சுர் எக்ஸ்போர்ட் பிராசஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முட்டை ஏற்றுமதியாளர்கள் அவர்கள் தான். முட்டை தேவைப் படுவோருக்கு அப்பீடா தகவல் அளிக்கும்.

முட்டை ஏற்றுமதி செய்யும் பண்ணைகளில் பண்ணை பராமரிப்பு தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது” என்றார். சங்க செயலாளர் கே.சுந்தரராஜ், பொருளாளர் பி. இளங்கோ, ஆல் இண்டியா பவுல்டரி ப்ராடக்ட் எக்போட்டர்ஸ் அசோசியேசன் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x