

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று கூறியதாவது: உணவு, எரிபொருள் மற்றும் உற்பத்தி துறையைச் சேர்ந்த பொருட்களின் விலை குறைந்து காணப்பட்டதையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் மொத்த விற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 5.85 சதவீதமாக குறைந்தது. இது, முந்தைய 21 மாதங்களில் காணப்படாத வகையிலான குறைந்த பணவீக்க விகிதமாகும்.
கடந்த மே மாதம் முதற் கொண்டே பணவீக்கம் குறையத் தொடங்கி அக்டோபரில் அது ஒற்றை இலக்கமான 8.39 சதவீதத்தை அடைந்தது.
பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கான பலன் வரும் மாதங்களில் தெரியத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அக்டோபரில் 8.33 சதவீதமாக அதிகரித்திருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் நவம்பரில் 1.07 சதவீதமாக சரிவடைந்துள்ளது. மேலும், காய்கனிகளுக்கான பணவீக்கமும் 17.61 சதவீதத்திலிருந்து (-)20.08 சதவீதமானது.
எரிபொருள் மற்றும் மின்சார தொகுப்புக்கான பணவீக்கம் 17.35 சதவீதமாகவும், உற்பத்தி துறை தயாரிப்புகளுக்கான பணவீக்கம் 3.59 சதவீதமாகவும் இருந்தன.