குறைந்த அளவிலான வரிவிதிப்பு மிகவும் அவசியம்: அருண் ஜேட்லி திட்டவட்டம்

குறைந்த அளவிலான வரிவிதிப்பு மிகவும் அவசியம்: அருண் ஜேட்லி திட்டவட்டம்
Updated on
1 min read

சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு இந்தியாவில் குறைந்த அளவிலான வரிவிதிப்பு இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அலுவலர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

மத்திய சுங்க வரி, உற்பத்தி வரி தேசிய அகாடமியில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:

உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டு நிறுவனங்களோடு சேவைத் துறையில் போட்டியிடுவதற்கு வரி விதிப்பானது மிகவும் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். சேவைத்துறையில் அதற்குரிய மாற்றத்தை நீங்கள் எளிதில் உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

மிக அதிக அளவில் வரி விதிக்கப்பட்டதால் கடந்த காலங்களில் வரி செலுத்துவது குறித்து மிகப்பெரிய வெறுப்பே பலரிடம் ஏற்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டுமெனில் வரி குறைவாக இருக்க வேண்டும்.

வரி விதிப்பானது மிகவும் இணக்கமானதாக இருக்க வேண்டும். அதற்குரிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். வரி விதிப்பு தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது வரித்துறை அதிகாரிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

வரித்துறை அதிகாரிகளைப் பொருத்த மட்டில் மிக உயர்ந்த தரத்தில் விதிகளை வகுப்பவர் மற்றும் மிகவும் கடினமான சொற்களால் விதிகளை உருவாக்குபவரே சிறந்த வரித்துறை அதிகாரியாகக் கருதப்படுகிறார். ஆனால் வரி செலுத்துவோரை அதிகம் கசக்கிப் பிழியாத வகையில் வரி விதிமுறைகள் இருக்க வேண்டும். தாமாக முன்வந்து வரி செலுத்துவோரை உரிய விதத்தில் கவுரவமாக நடத்த அதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். வரி இணக்க சூழல் நிலவும்போதுதான் இது சாத்தியமாகும் என்று ஜேட்லி சுட்டிக் காட்டினார்.

வரித்துறை அதிகாரிகள் மக்களின் நம்பிக்கைக்குப் பாதிதரமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக அனைத்தையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் அவர்களுக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்.

வரி விதிகளுக்கும் குற்ற விதிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. குற்றச் செயல்களுக்கு எப்படி தண்டனை நிச்சயமோ அதேபோல வரி ஏய்ப்புகளுக்கும் தண்டனை உண்டு. ஆனால் இதைக் கண்டுபிடிப்பதற்குத்தான் வரித்துறை அதிகாரிகள் தங்களது அனுபவ, படித்த அறிவைப் பயன்படுத்த வேண்டும். வரி விதிகளில் எப்போதுமே தளர்வு இருந்தது கிடையாது என்று ஜேட்லி குறிப்பிட்டார். கணக்கில் காட்டப்பட்ட பணம் அல்லது கறுப்புப் பணம் என்ற இரண்டு நிலையைத் தவிர வருமானத்தில் வேறொன்றும் இருக்க முடியாது என்று ஜேட்லி விளக்கினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப வரி விதிப்பு முறை இருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றிலும் வரி செலுத்துவது குடிமக்களின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக உள்ளது என்று ஜேட்லி சுட்டிக் காட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in