

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் கடந்த 148 நாட்களில் 1 கோடி கணக்குகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மும்பை பங்குப் பரிவர்த்தனைத் தளத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை 12 கோடியைத் தொட்டுள்ளது.
இந்தியாவில் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகிய இரு பங்குப் பரிவர்த்தனை நிறுவனங்கள் உள்ளன.
இதில் மும்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை டிசம்பர் 13-ம் தேதி நிலவரப்படி 12 கோடியைத் தொட்டுள்ளது. ஜூலை 18-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரையிலான கடந்த 148 நாட்களில் மட்டும் 1 கோடி கணக்குகள் மும்பை பங்குச் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தமாக உள்ள 12 கோடி முதலீட்டாளர்களில் 42% பேர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று மும்பை பங்குச் சந்தை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 23% பேர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 11% பேர் 40 முதல் 50 வயதுக் குட்பட்டவர்கள் என்றும் அந்நிறு வனம் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் அதிக எண்ணிக்கையில் முதலீடு செய்யும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. 12 கோடி முதலீட்டாளர்களில் 20% பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். 2-வது இடத்தில் குஜராத் (10%), 3-வது இடத்தில் உத்தர பிரதேசம் (9%) உள்ளது. 6% முதலீட்டாளர்களைக் கொண்டு தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் 4-ம் இடத்தில் உள்ளன.
மொத்தக் கணக்குகளில் எத்தனை செயல்பாட்டில் உள்ளன, எத்தனை கணக்குகள் பரஸ்பர நிதி முதலீட்டுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகின்றன என்பன குறித்த விவரங்களை மும்பை பங்குச் சந்தை வெளியிடவில்லை.