Published : 14 Dec 2022 04:00 AM
Last Updated : 14 Dec 2022 04:00 AM

ஜிஎஸ்டி வரி விதிப்பால் கோவையில் விமான சரக்கு ஏற்றுமதி பாதிப்பு

பிரதிநிதித்துவப் படம்

கோவை: விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு அக்டோபர் மாதம் முதல் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. தவிர ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது.

இதனால் கோவையில் மாதந்தோறும் 50 டன் சரக்கு ஏற்றுமதி குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது.

காய்கறி, பழவகைகள், பூக்கள், உணவு வகைகள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல வகையான சரக்குகள் கோவையில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இதனால் கோவையில் மாதந்தோறும் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு குறைந்துள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: கரோனாவுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் மாதந்தோறும் உள்நாட்டு சரக்கு பிரிவில் 750 டன், வெளிநாட்டு போக்குவரத்தில் 250 டன் வீதம் என 1,000 டன் சரக்குகள் கையாளப்படும்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை சரக்குகள் ஏற்றுமதிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டது. அக்டோபர் 1-ம் தேதி முதல் கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு 5 சதவீதமும், விமானங்களில் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவும், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. சிங்கப்பூர் விமானத்தில் ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக 1 டன் மட்டுமே சரக்கு கையாளப்படும். தற்போது அரை டன்னாக குறைந்துள்ளது. ஒரு சில நாட்கள் சரக்கு புக்கிங் செய்யப் படுவதில்லை.

வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படும் ஷார்ஜா விமானத்தில் ஒவ்வொரு முறையும் 3 அல்லது 3.5 டன் சரக்குகள் கொண்டு செல்லப்படும். ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக ஒவ்வொரு முறையும் 2 டன் மட்டுமே சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் கையாளப்படும் சரக்குகளின் அளவு 50 டன் வரை (பாண்டட் டிரக் சேவை உள்பட) குறைந் துள்ளது.

கரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து விமான சேவை தற்போதுதான் மீண்டு வர தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, உலகளாவிய பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவை சரக்கு ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x