Published : 14 Dec 2022 04:07 AM
Last Updated : 14 Dec 2022 04:07 AM

வட்டி விகிதம் முதல் சிபில் ஸ்கோர் வரை - வீட்டுக் கடன் வாங்க விரும்புவோர் கவனத்துக்கு...

பிரதிநிதித்துவப் படம்

நம் பெரும்பாலானவர்களின் கனவு, லட்சியம் எல்லாமே சொந்தமாக ஒரு சின்ன வீட்டையாவது கட்டிவிட வேண்டும் என்பது. ஒரே படுக்கையறை கொண்ட வீடாக இருந்தாலும் பரவாயில்லை, அது நமக்கு சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பது நம் பெரும்பாலானவர்களின் மனங்களிலும் கனன்று கொண்டிருக்கும் நீங்காத ஆசை.

இந்தக் கனவு நிறைவேற முன்பை விட இப்போது அதிக சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன. வங்கிக் கடன், அதுவும் வீட்டுக் கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 6.95 சதவீதத்திலிருந்து கூட சில வங்கிகள் கடன் தருகின்றன.

வட்டி குறைவாக இருக்கிறது, மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகள் உண்டு என்பதற்காகவெல்லாம் வீட்டுக்கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பது வங்கியாளர்கள் அட்வைஸாக இருக்கிறது. மேலும், வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்குவதற்கு முன்பாக பயனாளர்கள் சில விஷயங்களை யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனையாக உள்ளது.

நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா கூறியதாவது: முதலில் தேர்வு செய்ய வேண்டியது வீடா அல்லது வீட்டுக்கடனா? நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, வீட்டுக்கடன் விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், வீடு வாங்க அல்லது கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டுவதுதான்.

ஒருவருக்கு வீட்டுக்கடன் என்பது, அவர் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. சொந்த வீடு வாங்கலாம் அல்லது கட்டலாம் என முடிவு செய்த பிறகு, முதலில் வங்கியை அணுகி கிடைக்கக்கூடிய கடன் அளவைத் தெரிந்துகொள்வதுதான் நல்லது. அதைத் தெரிந்து கொண்ட பின்னர், அதற்கு ஏற்றாற்போல வீட்டைக் கட்டலாமா அல்லது அதைவிட குறைவான மதிப்பில் வீட்டை வாங்கிக் கொள்ளலாமா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும்.

பொதுவாக, 25 - 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல 70 மடங்கு கிடைக்கும் என்றும் 45 வயதுக்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல 50 - 60 மடங்கு வரை கிடைக்கும் என்றும் 45 வயதுக்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால், நம் ஆண்டு வருமானத்தைப் போல 4 - 5 மடங்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

நாம் வாங்கும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற இ.எம்.ஐ போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் 35 சதவிதம் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும். இதையெல்லாம் வங்கியை அணுகித் தெரிந்து கொள்ளாமல் வீடு கட்ட அல்லது வாங்க நீங்களாகவே முடிவெடுப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும்.

நிலையான வேலை மற்றும் வருமானம் இல்லாதவர்கள், நிச்சயமாக வீட்டுக்கடன் மூலம் வீடு கட்டும் கனவை, சற்றே தள்ளிப்போடுவது நல்லது. வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களில் பலர், அதை வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், ஆசை வார்த்தை காட்டும் பேச்சுகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு வட்டி விகிதம், மாறுபடும் வட்டி விகிதம், அபராதத் தொகை போன்றவற்றை சரிவரத் தெரிந்து கொள்ளாமல் வாங்கிவிடுகிறார்கள்.

இறுதியில் வாங்கிய கடனை இரு மடங்காகத் திருப்பித்தரும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே, எதிர்காலத்தில் எதிர்பாராமல் திடீர் செலவுகள் எற்பட்டாலும், உங்களால் சமாளிக்கக்கூடிய வகையி லிருக்கும் வீட்டுக் கடன் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள். வீட்டுக் கடனுக்கான நிதி நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கு முன்னர் வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம், கடன் ஒப்புதல் காலம், தாமத இ.எம்.ஐ-க்கான அபராதம், கடன் விதிமுறைகள், முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான கட்டணம் போன்ற அம்சங்களை ஆராய்ந்துவிட்டு விண்ணப்பிப்பது நல்லது.

உங்களுக்கு வங்கிக் கடன் ஒப்புதல் அளிப்பதில் `சிபில்’ எனப்படும் கடன் மதிப்பீடுக்கு மிக முக்கியப் பங்கிருக்கிறது. எனவே, வீட்டுக் கடன் கேட்டு வங்கியை அணுகுவதற்கு முன், உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். தனிநபர் கடன், பிற மாதக் கடன் தவணைகள், தாமதம் மற்றும் தவறிய தவணைகள் உட்பட அனைத்துத் தகவல்களும் சிபில் ஸ்கோர் மூலம் வங்கிக்குத் தெரிந்துவிடும். சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இதில் 700-க்கும் மேலிருந்தால், சுலபமாகக் கடன் கிடைத்துவிடும், வட்டியும் குறைவாக இருக்கும். வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது பெரும்பாலும் வங்கிக் கிளையாகத்தான் இருக்கும். இருப்பினும், உங்களுடைய கடன் விண்ணப்பத்துக்கான ஒப்புதல் எங்கிருந்து கிடைக்கிறது என்பதைக் கவனிப்பது முக்கியம். உங்கள் வங்கிக் கிளையே கடன் வழங்கிவிடுமென்றால், விரைவாகக் கடன் கிடைத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x