கோவையில் குறு, சிறு தொழில் நிறுவனங்களில் 40% ‘ஆர்டர்’ குறைந்தது: தொழிலாளர்கள் வேறு பணி தேடிச் செல்லும் அவலம்

கோவையில் செயல்படும் குறுந்தொழில் நிறுவனம். (கோப்பு படம்)
கோவையில் செயல்படும் குறுந்தொழில் நிறுவனம். (கோப்பு படம்)
Updated on
1 min read

கோவை: கோவையில் செயல்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்ததால் தொழில்நுட்ப பணியாளர்கள் ஹோட்டல் தொழிலாளர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஜவுளி மட்டுமின்றி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பம்ப்செட், வார்ப்படம், கிரைண்டர், பொறியியல் பொருட்கள் உற்பத்தியும் பிரதானமாக உள்ளது. கோவையில் பதிவு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 1.5 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

பம்ப்செட், வார்ப்படம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் நிலவும் மந்தநிலை காரணமாக பணி ஆணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில்நுட்ப பணியாளர்கள் ஹோட்டல் தொழிலாளர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம் கூறுகையில், “பருவமழை, உலகளாவிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்துள்ளன. இதனால் தொழில்முனைவோர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஜனவரிக்கு பின் நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, “கரோனா தொற்று மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது மீண்டும் ஜிஎஸ்டி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பணி ஆணைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியில் மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலைப்பாடுதான் கொண்டுள்ளன. நாங்கள் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியும் பலனில்லை.

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் 5 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பெயரளவுக்கு செயல்படுகின்றன. பிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. இதனால் நிலைமை சீரடையும் வரை ஹோட்டல் உள்ளிட்ட சேவைத்துறையின்கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணி யாற்ற சென்றுள்ளனர். இந்நிலை நீடித்தால் மிகவும் ஆபத்து” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in