Published : 13 Dec 2022 04:05 AM
Last Updated : 13 Dec 2022 04:05 AM
கோவை: கோவை பூம்புகார் விற்பனையகத்தில், ‘மெய்நிகர் கைவினை கண்காட்சி’ முறையிலான பொருட்கள் விற்பனை திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை பெரியகடை வீதியில் உள்ள தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் எனப்படும் பூம்புகார் விற்பனையகத்தில், கைவினைக் கலைஞர்கள் மூலம் தயாரிக்கப்படும் சிலைகள், ஓவியங்கள், பூஜைப் பொருட்கள், சிற்பங்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. இந்த விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ‘மெய்நிகர் கைவினைக் கண்காட்சி’ நேற்று தொடங்கப்பட்டது.
இதுதொடர்பாக, பூம்புகார் விற்பனையகத்தின் மேலாளர் கி.ரொனல்டு செல்வஸ்டின் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கோவையில் முதல்முறையாக, பூம்புகார் விற்பனையகத்தில் ‘மெய்நிகர் கைவினைக் கண்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. நேரில் வரமுடியாத வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்க விரும்பும் பொருட்களை மெய்நிகர் காட்சி மூலம் பார்த்து வாங்குவதே இத்திட்டமாகும். மெய்நிகர் கைவினைக் கண்காட்சி மூலம் தற்போது பஞ்சலோக சிலைகள், பித்தளை சிலைகள் மற்றும் விளக்குகள், கற்சிலைகள், தஞ்சை ஓவியங்கள், மரச் சிற்பங்கள், பர்னிச்சர் பொருட்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்பு கொண்டால், அவர்களது இடத்துக்கு ‘மெய்நிகர் கைவினை கண்காட்சி’ கருவிக் கட்டமைப்புகளுடன் செல்வோம். ‘ஹெட் கியர்’ எனப்படும் கண் கருவியை வாடிக்கையாளர்களுக்கு அணிவிப்போம். கையில் 2 ஜாய் ஸ்டிக் கருவிகளும் தரப்படும். அக்கருவி மூலம் வாடிக்கையாளர் முகப்புப் பக்கத்தில் நுழைந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஒருமொழியை தேர்வு செய்து உள்ளே செல்லலாம். அதில் இணைக்கப்பட்டுள்ள விற்பனைப் பொருட்கள் தத்ரூபமாக தெரியும். ஜாய் ஸ்டிக் கருவியின் மூலம் ஒவ்வொரு பொருட்களின் அருகில் சென்று பார்க்கலாம்.
இதில் என்ன சிறப்பம்சம் என்றால், அலங்காரப் பெட்டி இருந்தால் அதை திறந்து பார்க்கலாம், சிலைகளை தூக்கிப் பார்க்கலாம். நேரடியாக பார்க்கும் போது ஒரு சிலை எவ்வாறு எடை, உயரம், வடிவமைப்புடன் உள்ளதோ, அதேபோல மெய்நிகர் காட்சியில் பார்க்கும்போது இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. பிறகு தங்களுக்கு பிடித்தமான பொருட்களை ஆர்டர் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நேரில் பார்க்கும் உணர்வு: பூம்புகார் மேலாளர் கூறும்போது, ‘‘ஒரு சிலையை மெய்நிகர் காட்சியில் கொண்டு வர வேண்டுமென்றால், முதலில் போட்டோ ஜியோமெட்ரிக் முறையில் அதை பல்வேறு கோணங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படம் எடுக்கப்படுகிறது. பின்னர், ஒரு மென்பொருளை பயன்படுத்தி அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணைக்கப்படும். மற்றொரு மென்பொருளை பயன்படுத்தி 3டி வடிவமைப்பு ஏற்படுத்தப்படும். மூன்றாவது மென்பொருளை பயன்படுத்தி அது காட்சிப்படுத்தும் மெய்நிகர் கேலரியில் கொண்டு வரப்படும். நேரில் பார்க்கும் உணர்வினை மெய்நிகர் காட்சியிலும் காணலாம்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT