80-சி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படலாம்: நிதி அமைச்சகம் ஆலோசனை

80-சி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படலாம்: நிதி அமைச்சகம் ஆலோசனை
Updated on
1 min read

சேமிப்பை அதிகப்படுத் துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

வருமான வரிச்சட்டம் 80சி, 80 சிசி, 80 சிசிசி ஆகிய பிரிவுகளின் படி ஒரு லட்ச ரூபாய் வரை சேமிக்கப்படுவதற்கு வரிவிலக்கு உண்டு. வரும் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இந்த வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேமிப்பை அதிகப்படுத்து வதற்கு வங்கியாளர்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள்.

நாட்டில் சேமிப்பும் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு சேமிப்பு விகிதம் ஜி.டி.பி.யில் 38 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த 2012-13ம் ஆண்டுகளில் இது 30 சதவீதமாக சரிந்துவிட்டது.

இப்போது இந்த வரம்பை அதிகரிக்கும்போது மாத சம்பளக்காரர்களுக்கு ஆறுதலாக இருக்கும். மேலும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சலுகை ஊக்கம் அளிக்கும் என்பதால் இந்த வரம்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

நேரடி வரி விதிப்பு முறையும் ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

இன்ஷூரன்ஸ், வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், இ.எல்.எஸ்.எஸ். (மியூச்சுவல் ஃபண்ட்), ஐந்து வருட வங்கி டெபாசிட் உள்ளிட்ட பல வகையில் சேமிப்பதன் மூலம் வருமான வரி விலக்கை பெற முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in