தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடத்திற்காக 910 ஹெக்டேர் நிலம் கையகம்: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகத்தில் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்திற்காக 910 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ள தகவல்: தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற இலக்கை அடைவதற்கும், மத்திய அரசு இரண்டு பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடங்களை (டிஐசி) நாட்டில் நிறுவியுள்ளது, ஒன்று உத்தரபிரதேசத்திலும் மற்றொன்று தமிழகத்திலும் நிறுவப்பட்டுள்ளன.

ஆக்ரா, அலிகார், சித்ரகூட், ஜான்சி, கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய 6 முனையங்கள் உத்தரப் பிரதேச பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தை (UPDIC) மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேபோல், சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 5 முனையங்கள் தமிழ்நாடு பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தை (TNDIC) மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிறந்த பாதுகாப்பு உற்பத்தி சூழல் அமைப்பை உருவாக்க அரசு விரும்புகிறது. உற்பத்தி, சோதனை மற்றும் சான்றிதழுக்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்கான விநியோகச் சங்கிலி உள்ளிட்ட சாதகமான நிலைமைகளைக் கொண்டிருப்பது, பெரிய அளவிலான பொருளாதாரங்களை உருவாக்குவது மற்றும் நாட்டில் சர்வதேச அளவில் போட்டித்தன்மையுள்ள நிறுவனங்களின் வளர்ச்சியை எளிதாக்குவதற்கு அரசு முனைப்புடன் உள்ளது.

உத்தரப் பிரதேச அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அந்த மாநிலத்தில் உள்ள பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தில் தொழில் தொடங்க 105 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 12 ஆயிரத்து 139 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை மேற்கொள்ள கையெழுத்தாகியுள்ளன. இதில் 2,422 கோடி ரூபாய் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்திற்காக 1,608 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அந்த மாநிலத்தில் 11 ஆயிரத்து 794 கோடி ரூபாய் முதலீடுகளுக்காக 53 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 847 கோடி ரூபாய் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்திற்காக 910 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in