

புதுடெல்லி: இந்தியப் பொருளாதார வளர்ச்சி கண்டு சிலருக்கு பொறாமை ஏற்படுவதாக காங்கிரஸ் எம்.பி கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. அனுமூலா ரேவந்த் ரெட்டி, இந்திய ரூபாய் மதிப்பு பற்றி பேசினார். அவர், “இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது 83 என்றளவில் உள்ளது. இதை மத்திய அரசு கவனிக்கிறதா? அப்படியென்றால் இதன் நிமித்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2013-ல் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மன்மோகன் சிங் அரசை ரூபாய் மதிப்பு நிமித்தமாக விமர்சித்திருந்தார். அப்போது அவர், ‘இந்திய ரூபாய் மதிப்பு அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. தமிழ் மக்கள் ஏன் இவரை டெல்லிக்கு அனுப்பினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று ப.சிதம்பரத்தை மறைமுகமாகத் தாக்கியிருந்தார். இப்போது ரூபாய் ஐசியுவில் இருந்து திரும்ப அரசு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா?" என்று வினவினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும்போல் மிகவும் வலுவாக இருக்கிறது. வேறு எந்த நாணயத்தைவிடவும் வலுவாக இருக்கிறது. டாலர் ரூபாய் மதிப்பு ஊசலாட்டத்தை தவிர்க்க ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி இருப்பை பயன்படுத்தி தீர்வு காண முற்பட்டுள்ளது. சிலருக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு பொறாமை.
இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருப்பதில் எதிர்க்கட்சிக்கு ஏதோ பிரச்சினை உள்ளதுபோல. உண்மையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால், சிலர் அதை நகைச்சுவையாகக் கருதுகின்றனர்" என்றார்.