

திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்று இரண்டு வார உச்சத்தில் வர்த்தகத்தை முடித்தன. சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்ந்து 25413 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102 புள்ளிகள் உயர்ந்து 7611 புள்ளியில் முடிவடைந்தது.
மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் நன்றாக உயர்ந்தே முடிவடைந்தன. மிட்கேப் குறியீடு 1.9 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.8 சதவீதமும் உயர்ந்தன.
அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. குறிப்பாக பவர் குறியீடு 2.88 சதவீதமும், கேபிடல் குட்ஸ் குறியீடு 2.18 சதவீதமும் உயர்ந்தன. இதற்கடுத்து ஹெல்த்கேர் குறியீடு 1.8 சதவீதமும், வங்கி குறியீடு 1.71 சதவீதமும் உயர்ந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் சன்பார்மா, டாடா பவர், ஓ.என்.ஜி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. மாறாக பஜாஜ் ஆட்டோ, எம் அண்ட் எம், மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் விப்ரோ ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன
பட்ஜெட்டுக்கு முந்தைய ஏற்றம் சில துறைகளில் இருக்கும் என்றாலும் இந்த ஒரு வாரத்துக்கு ஏற்ற இறக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தார்கள். மேலும் சர்வதேச தகவல்கள் சந்தையின் போக்கினைத் தீர்மானிக்கும். வரும் வாரங்கள் பல முக்கியமான சர்வதேச தகவல்கள் வெளி யாகவுள்ளன. வேலையில்லாதவர் களின் எண்ணிக்கை, ஐரோப்பிய யூனி யனின் வேலையில்லா தவர்களின் விகிதம், ஐரோப்பிய யூனியனின் ஜி.டி.பி. வளர்ச்சி, ஜப்பானின் உற்பத்தி விகிதம் ஆகியவை வரும் நாட்களில் வர இருக்கிறது. அதைப் பொறுத்துதான் சந்தையில் மாற்றம் இருக்கும்.
வரும் புதன்கிழமை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனட் ஏலன் நிதி ஸ்திரத்தன்மை குறித்து பேச இருக்கிறார். சந்தை இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
ஆசிய சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தன. ஹாங்காங் சந்தை மற்றும் ஜப்பானின் நிக்கி ஆகியவை ஏற்றத்துடனும் ஹேங்க் செங் சந்தை சரிந்தும் முடிவடைந்தன. அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்திருந்தாலும் ஆட்டோ குறியீடு 0.3 சதவீத அளவு மட்டுமே உயர்ந்தது.
முதலீட்டாளர்கள் சொத்து மதிப்பு ரூ.16 லட்சம் கோடி உயர்வு
நடப்பு காலாண்டில்(ஏப்ரல் - ஜூன்) முதலீட்டாளர்களின் சொத்து ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. புதிய அரசு அமைந்தது, அந்நிய முதலீடு அதிகரித்தது ஆகிய காரணங்களால் சென்செக்ஸ் 13.52 சதவீதம் உயர்ந்தது.
மார்ச் 31-ம் தேதி ரூ.74.15 லட்சம் கோடியாக இருந்த சொத்து மதிப்பு, ஜூன் 30-ம் தேதி 16 லட்சம் கோடி அதிகரித்து 90.19 லட்சம் கோடியாக இருக்கிறது. பல சீர்த்திருத்தங்கள் வரும் என்று அந்நிய முதலீடு வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் பட்ஜெட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் அது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது.