

புதுடெல்லி: இந்தியா 2023-ம் ஆண்டில் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்று தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெனோரி நாலேட்ஜ் நிறுவனம் இந்திய நிறுவனங்களின் தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரிகளிடம் (சிஎக்ஸ்ஓ) கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், 84 சதவீத அதிகாரிகள், சர்வதேச அளவில்பொருளாதார நெருக்கடி காணப்பட்டாலும், 2023-ம் ஆண்டில் இந்தியதொழில்துறை வளர்ச்சியில் பயணிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி காணப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரிமாதம் ரஷ்யா - உக்ரைன் இடையில் போர் தொடங்கியதையடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பணவீக்கம் உச்சம் தொட்டது. மேலும், விநியோகச் சங்கிலி சிக்கலுக்கு உள்ளானது. இது ஒருபுறம் என்றால், கரோனாபரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் சீனா தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வந்தது. இதனால், சீனா உடனான ஏனைய நாடுகளின் வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளானது. இதுவும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது.
இத்தகைய சூழலில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக ஐஎம்எஃப், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்தன. கொள்கை ரீதியாக இந்தியாவில் கொண்டு வரப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள், இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதாக அவ்வமைப்புகள் குறிப்பிட்டன.
இந்திய தொழில்துறையினர்மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துக் கணிப்பும் இதை உறுதி செய்வதாக உள்ளது.
இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்து தொழில்துறையினர் கூறுகையில், “வாகனத் துறை மற்றும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி மேம்பட்ட நிலையில் இருக்கும். மின்வாகனத்தை நோக்கி இந்தியா வேகமாக நகர்வதால் அது சார்ந்தமுதலீடு அதிகரித்து வருகிறது. இதுஒட்டுமொத்த தொழில் துறையையும் முன்னகர்த்திச் செல்வதாக உள்ளது. அதேபோல், இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியில் உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் மருந்துத் தயாரிப்புக்கு இந்தியாவை நாடுகின்றன. இதனால், அத்துறையில் அந்நிய முதலீடு அதிகரித்து உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்கள் டிஜிட்டலை நோக்கி நகர்வது குறித்தும், ஊழியர்களின் திறன் குறித்தும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் திறன்மிக்க ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக 60 சதவீத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் பணி விலகல் அதிகரித்திருப்பது நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது என்று50 சதவீத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திறன்மிக்க ஊழியர்களை தக்க வைப்பதற்காக வீட்டிலிருந்து பணிபுரிதல், ஹைபிரிட்மாடல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு நிறுவனங்கள் வேகமாக மாறிவருவதாக 42 சதவீத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.