

கோவை: இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளை தலைவர் ஸ்ரீராமலு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய விமான போக்குவரத்து செயலாளர் மற்றும் விமான நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசினோம்.
கோவை விமான நிலையத்தை ஆண்டுக்கு 1.5 கோடி பேர் பயன்படுத்தும் வகையில் பிரம்மாண்ட முறையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்த வேண்டும். தற்போதுள்ள விமான ஓடுதளம் 9,760 அடியாக உள்ளது.
இதை 12 ஆயிரம் அடியாக அதிகரிக்க வேண்டும். இதனால் பெரிய விமானங்கள் எளிதில் தரையிறங்கவும் புறப்பட்டு செல்லவும் முடியும். புறப்பாடு பகுதிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்.
இதற்கு பதிலளித்த விமான போக்குவரத்துதுறை அதிகாரிகள், கோவை விமான நிலைய மேம்பாட்டு பணிகளை விமான நிலைய ஆணையகம் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள உள்ளதாகவும், தமிழக அரசு நிலங்களை விரைந்து ஒப்படைத்தால் உடனடியாக பணிகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கோவை விமான நிலைய விரிவாக்க திட்டப் பணிகள் தற்போது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.