

பங்குச் சந்தைகளின் சரிவு நேற்றும் தொடர்ந்தது. தொடர்ந்து ஏழாவது நாளாக நேற்றும் சந்தைகள் சரிவடைந்தன. 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு அதிக நாள் பங்குச் சந்தைகள் சரிவது இப்போதுதான். சென்செக்ஸ் 26000 புள்ளிகளுக்கு கீழேயும், நிப்டி 8000 புள்ளிகளுக்கு கீழேயும் சரிந்தது. கடந்த ஏழு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருக்கிறது.
சந்தையை உயர்த்துவதற்கான எந்த ஒரு நிகழ்வும் கடந்த சில நாட்களாக நடக்கவில்லை. தவிர பணமதிப்பு நீக்கம் காரணமாக நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் மோசமாக இருக்கும் என்பது முக்கியமான காரணமாகும். அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, இத்தாலி வங்கித்துறையில் உருவாகி இருக்கும் பிரச்சினைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் வெளியிட இருக்கும் பொருளாதார தகவல்கள் கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறி வருகிறது. மேலும் கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக வர்த்தகர்களின் மனநிலை மாறி இருக்கிறது.
இதனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 262 புள்ளிகள் சரிந்து 25979 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 82 புள்ளிகள் சரிவடைந்து 7979 புள்ளியில் முடிவடைந்தது.
துறைவாரியாக பார்க்கும் போது மெட்டல் துறை குறியீடு 2.78 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து இன்பிராஸ்ட்ரெக்சர், கன்ஸ்யூமர் டியூரபிள் மற்றும் மின் துறை குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல் மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகள் சரிந்தன. நான்கு பங்குகள் மட்டுமே சிறிதளவு உயர்ந்து முடிந்தன.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, அந்நிய முதலீடு தொடர்ந்து வெளியேறி வருகிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 25.02 கோடி டாலர் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. பண மதிப்பு நீக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் கவலை அடைந்திருக்கின்றனர். அதனால் தங்களது லாபத்தை வெளியே எடுத்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் பண மதிப்பு நீக்கம் காரண மாக ரிசர்வ் வங்கி கணித்திருப்பதை விட பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என நொமுரா நிறுவனம் கணித்திருக்கிறது. தவிர பி-நோட் மூலமாக வரும் முதலீடுகளும் மூன்று வருடங்களில் இல்லாத அளவு குறைந்திருக்கிறது.