

புதுடெல்லி: வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில், “வெளிநாட்டு பண வரவில் உலகில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு 89.4 பில்லியன் டாலர் வந்தது. இத்தொகை 2022-ல் 12 சதவீதம் அதிகரிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இந்தியாவுக்கு அனுப்பும் பணம் இந்த ஆண்டு 100 பில்லியன் டாலர் (ரூ.8,17,600 கோடி) என்ற மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்சிகோ 60 பில்லியன் டாலர் வரவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் என்றும், சீனா இந்த ஆண்டு 51 பில்லியன் டாலர்களைப் பெறும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூஸிலாந்து போன்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளில் விரிவடைந்துள்ள வேலைவாய்ப்பு சந்தையை இந்தியர்கள் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும், பெரும்பாலான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் அமைப்புசாரா துறைகளில் உள்ள வேலைவாய்ப்பை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பும் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம்.
மேலும், அவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் நீண்ட நாட்கள் தங்கியுள்ளதால் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை பயன்படுத்தி அந்நியச் செலாவணியை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.
இதனிடையே, தற்போது ஏற்பட்டுள்ள டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிக சாதகமாக அமைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.