

மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இந்த நிலையில் மக்கள் தங்கள் வசம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) என பெயரிடப்பட்டுள்ளது. வருமான வரி திருத்த மசோதா 2016 மக்களவையில் நவம்பர் 29-ம் தேதி நிறைவேறியது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக்கிக்கொள்ளலாம் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவைக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்திருக்கிறார். மொத்த தொகையில் 25 சதவீத தொகையை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும். இந்த தொகை பாசனம், வீடு, கட்டுமானம், ஆரம்பகல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும்.
வரி ஏய்ப்பு செய்து பதுக்கிய கறுப்புப் பணத்துக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும். அந்நிய செலாவணி மோசடி வழக்கு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வழிகளில் கிடைத்த பணத்துக்கு இந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற முடியாது என்றும் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் 50 சதவீத வரி செலுத்துபவர்கள் மீது வழக்கு தொடரப்பட மாட்டாது என வருவாய் துறை செயலாளர் ஹாஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் இன்று முதல் வரும் மார்ச் 31 வரை தங்கள் வசம் உள்ள கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ளலாம்.
பண மதிப்பு நீக்கம் செய்யப் பட்டதை அடுத்து, இதுவரை ரூ.12.44 லட்சம் கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி.