

கோவை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரி வசூல் இலக்கில் 42 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, இரு மாநில வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கோவை மண்டல வருமானவரித்துறை தலைமை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வருமானவரி வசூலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சிறந்து விளங்குகிறது. இந்த ஆண்டு ரூ.1.8 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 42 சதவீதம் வரி வசூல் பணி நிறைவடைந்துள்ளது. வரி வசூலில் கோவை மண்டலம் மட்டும் 28 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளன.
வருமானவரித் துறையில் முன்பு ‘ரீ பண்ட்’ (திரும்ப பெறும் தொகை) தான் முக்கிய பிரச்சினையாக வரி செலுத்துவோர் மத்தியில் காணப்பட்டது. இந்நிலை தற்போது மாறியுள்ளது. கோவை மண்டலத்தில் மட்டும் கடந்த முறை ரூ.700 கோடி ரீபண்ட் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை ரூ.1,800 கோடி, அதாவது 140 சதவீதம் கூடுதலாக ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இடையே நல்லுறவு மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வருமானவரி படிவம் தாக்கல் செய்வதில் தொடங்கி விசாரணை வரை அனைத்திலும் ஆன்லைன் முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கோவை வருமானவரித்துறை முதன்மை ஆணையர் பூபால் ரெட்டி, தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித்துறை முன்கூட்டிய வரி பிடித்தம் (டிடிஎஸ்) பிரிவின் தலைமை ஆணையர் ரத்தினசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.