Published : 05 Dec 2022 07:43 AM
Last Updated : 05 Dec 2022 07:43 AM

நிறுவனங்களின் யுபிஐ பரிவர்த்தனைக்கு 2 ஆண்டுகளுக்கு கட்டுப்பாடு இல்லை: என்பிசிஐ அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனை இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகமானது. யுபிஐ நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியாவில் பணப்பரிவர்த்தனை செயல்பாடு மிக எளிமையானது. தற்போது பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனைக்கான வசதிகளை வழங்கி வருகின்றன. எனினும், இந்தியாவில் நிகழும் யுபிஐ பரிவர்த்தனையில் 80 சதவீதம் கூகுள் பே மற்றும் போன்பே ஆகிய இரு செயலிகளின் வழியாகவே நடைபெறுகின்றன.

நிறுவனங்களின் ஆதிக்கம்

யுபிஐ பரிவர்த்தனை சேவையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் பொருட்டு, யுபிஐ கட்டமைப்பை நிர்வகிக்கும் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) 2020 நவம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கடந்த 2021 ஜனவரி முதல், 30 சதவீத அளவிலே யுபிஐ பரிவர்த்தனையை சேவை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

30 சதவீதம் மட்டும்

அதாவது, 30 சதவீத எண்ணிக்கைக்கு மேல் ஒரு நிறுவனம் பரிவர்த்தனை சேவையை வழங்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டால், யுபிஐ பரிவர்த்தனையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவது குறையும் என்றும் மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் கட்டுப்பாடு யுபிஐ வளர்ச்சியை தடுக்கும் என்று கருத்துகள் எழுந்தன. இதையடுத்து இந்த விதியை நடைமுறைப்படுத்த 2023 ஜனவரி வரையில் என்பிசிஐ கால அவகாசம் வழங்கியது. இந்த மாதத்துடன் கால அவகாசம் முடிவடைகிற நிலையில், மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024 டிசம்பர் வரையில் யுபிஐ பரிவர்த்தனை நிறுவனங்கள் எவ்வளவு பரிவர்த்தனை வேண்டுமானாலும் வழங்கிக் கொள்ளலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறித்து என்பிசிஐ கூறுகையில், “தற்போது யுபிஐ பரிவர்த்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதன் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, தற்போது யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை தொடர்பான விதியை கடைபிடிக்க நிறுவனங்களுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x