

மும்பை: மும்பையில் இரண்டு அடுக்கு மின்சார பேருந்து சேவை வரும் 2023, ஜனவரி14-ல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு, பிரிஹன்மும்பை மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து நிறுவனம் (பெஸ்ட்) பேருந்து சேவை வழங்கி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் உட்பட சுமார் 3,500 பேருந்துகளை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா நேற்று முன்தினம் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது. மும்பையில் இரண்டு அடுக்கு மின்சாரப் பேருந்துகளுக்கான ஒப்புதல் இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இதற்கு ஒப்புதல் பெறப்படும். குறைந்தபட்சம் 10 பேருந்துகளுக்கான சேவை வரும் ஜனவரி14-ல் தொடங்கும். முதல்கட்டத்தில் இது படிப்படியாக 50 பேருந்துகளாக அதிகரிக்கப்படும்.
இந்த மாதத்தின் பிற்பகுதியில், பிரீமியம் ஒற்றை அடுக்கு மின்சார பேருந்து சேவையை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதில் பயணிகள் தங்கள் இருக்கைகளை ஒரு செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 500 மின்சார வாகனங்களுடன் டாக்ஸி சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான டெண்டர்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. ‘சலோ’ செயலி மூலம் மக்கள் இந்த டாக்ஸிகளுக்கு முன்பதிவு செய்யலாம். குளிர்சாதன வசதி இல்லாத 45 இரண்டு அடுக்கு டீசல் பேருந்துகள் தற்போது எங்களிடம் உள்ளன. இவற்றை 2024-ம் ஆண்டுக்குள் படிப்படியாக அகற்ற உள்ளோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.