Published : 27 Dec 2016 10:32 AM
Last Updated : 27 Dec 2016 10:32 AM

தொழில் முன்னோடிகள்: ஜி. டி. பிர்லா

(சென்றவாரத் தொடர்ச்சி)

பிர்லாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் அவரது முடிவெடுக்கும் திறமை, வேகம். முடிவெடுத்தபின், உலகமே எதிர்த்து நின்றாலும், முன் வைத்த காலை பின் வைக்கமாட்டார். மார்வாரி குடும்பங்களில், வயதில் மூத்தவர்களை மதிப்பதும், அவர்கள் சொல்லைத் தட்டாமல் நடப்பதும் பாரம்பரியம். குடும்பத் தொழிலான தரகு வியாபாரத்தை விட்டு, தொழிற்சாலை ஆரம்பிக்க பிர்லா திட்டமிட்டபோது, ஒட்டுமொத்தக் குடும்பமும் அவரை எதிர்த்தது, குறிப்பாக, இளமைக் காலத்தில் அவருக்கு பிசினஸ் வழிகாட்டியாக இருந்த அண்ணன் ஜூகல் கிஷோரும் எதிர்த்தார். ஆனால், பிர்லா தன் பாதையில் தொடரத் தயங்கவேயில்லை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் தொழில்துறையில் எதிர்த்த பிர்லா, சமூகத்திலும் ஒரு போராளிதான். 1925 இல், அவருடைய மூத்த அண்ணனின் மனைவி காலமானார். இரண்டு சின்னக் குழந்தைகள். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மார்வாரிப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்தார்கள். பிர்லா குடும்பம் ராஜஸ்தான் மார்வாரிகள். தங்களை உயர்ந்த ஜாதியாக நினைப்பவர்கள். உத்தரப் பிரதேச மார்வாரிக் குடும்பங்களில் பெண் எடுக்கமாட்டார்கள். ஆகவே, மார்வாரிகள் சங்கம் திருமணத்துக்குத் தடை விதித்தது. இதையும் மீறிக் கல்யாணம் நடந்தது.

பிர்லா குடும்பத்தை, தங்கள் சமூகத்திலிருந்து சங்கத்தினர் ஒதுக்கிவைத்தார்கள். அவர்களோடு பிசினஸ் செய்வதை நிறுத்தினார்கள். சுமார் 5 லட்சம் அவதூறு நோட்டீஸ்களை விநியோகித்தார்கள். மார்வாரிக் குடும்பங்களுக்குள் அபார ஒற்றுமை உண்டு. தனி வாழ்க்கையிலும், பிசினஸிலும் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்வது வாடிக்கை. இதனால், சங்கத்தின் கட்டளைகளை யாருமே மீற மாட்டார்கள். பணிந்து போவார்கள். பிர்லா பயப்படவேயில்லை. எதிர்கொண்டார். மார்வாரி இனமே இரண்டாகப் பிளவுபட்டது. பிர்லாவின் பிசினஸும் பாதிக்கப்பட்டது. ஆனாலும், பிர்லா தன் கொள்கை சரியென்று உறுதியோடு நின்றார்.

காந்திஜியோடு பிர்லாவுக்கு இருந்த நட்பிலும், இதே அணுகுமுறைதான். மகாத்மாவுக்கு ஏராளமான தொண்டர்கள் உண்டு. ஆனால், அவரோடு சரிசமமாகப் பழகும் நண்பர்கள் ஒரு சிலர்தாம். அவர்களுள் பிர்லா முக்கியமானவர். இதனால்தான், பிர்லாவும், தன் சுயசரிதைக்கு மகாத்மாவின் நிழலில் என்றும் ஜிடி. தலைப்பு வைத்திருக்கிறார். டெல்லி வரும்போதெல்லாம், காந்திஜி பிர்லா ஹவுஸ் எனப்படும், பிர்லாவின் வீட்டில்தான் தங்குவார். வாழ்க்கையின் இறுதி 144 நாட்கள் மகாத்மா தங்கியது இங்கேதான்; அவர் படுகொலை செய்யப்பட்டதும் இந்த வளாகத்தில்தான். இந்தக் கட்டடம் இன்று காந்திஜி நினைவு அருங்காட்சியகமாக இருக்கிறது. ஆகவே, தொழில் முன்னோடி என்பதையும் தாண்டி, பாரத வரலாற்றில் பிர்லாவுக்குத் தனி இடம் உண்டு.

இந்த நெருக்கத்திலும், காந்திஜியின் கருத்துகளோடு பகிரங்கமாக மாறுபட பிர்லா தயங்கியதேயில்லை. காந்திஜியோடு காரசாரமாக விவாதிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. குடிசைத் தொழில்கள் மட்டுமே இந்தியாவுக்கு விமோசனம் என்று காந்திஜி நினைத்தார். கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் காண முடியும் என்பது பிர்லாவின் உறுதியான நம்பிக்கை. காந்திஜிக்காக பிர்லா தன் கொள்கையைத் தளர்த்திக்கொள்ளவில்லை. காந்திஜியும், இதைத் தவறாக நினைக்கவில்லை. எத்தனை அரிய நட்பு?

பிர்லா இரண்டு முக்கிய நிர்வாகக் கொள்கைகளை வைத்திருந்தார். குழுமத்தின் வெற்றிக்கும், அவர் நிறுவிய நிறுவனங்கள் நிலைத்து நிற்பதற்கும், இந்தக் கொள்கைகள் முக்கிய காரணம்.

ஆரம்ப காலங்களில், பிர்லா நஷ்டத்தில் ஓடிய பல பஞ்சாலைகளை வாங்கினார். நிர்வாகத்தை மேம்படுத்தி, அவற்றை லாபப் பாதைக்குக் கொண்டுவந்தார். ஆனால், பல தொழிலாளர் பிரச்சினைகள் வந்தன. இந்த அனுபவத்தால், பின்னாட்களில், அவரது அணுகுமுறை தலைகீழாக மாறியது. 1950 குப் பின் வந்த ஒவ்வொரு தொழிற்சாலையும், புதிதாக நிறுவப்பட்டதுதான்.

அனுபவசாலிகளை அதிகச் சம்பளத்தில் எடுப்பதைவிட, புதியவர்களைக் குறைவான சம்பளத்தில் எடுத்து, நம் தொழிலில் பயிற்சி தந்தால், அவர்கள் அதிக அர்ப்பணிப்போடு வேலை செய்வார்கள்.

கீழ்நிலையில் வேலைக்குச் சேர்ந்த பலர் சி.இ.ஓ க்களாக உயர்ந்தார்கள், பிர்லா நிறுவனங்களை அற்புதமாக நடத்தினார்கள். பிர்லாவின் நிர்வாகக் கொள்கைக்குக் கிடைத்த அங்கீகார முத்திரை இது. பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கும் என் நண்பர் அலெக்ஸ் ஜோசப் சொல்லுவார், `பிர்லா குழுமம் ஒரு மேனேஜ்மென்ட் ஸ்கூல் மாதிரி. திறமைசாலிகளைப் பட்டை தீட்டியிருக்கிறது.’

தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பிர்லாவிடம் நிறைய உண்டு. பிர்லா தன் நேரத்தை பணத்தைவிடச் சிக்கனமாகச் செலவிடுவார். இவருடைய அன்றாட வாழ்க்கை எப்படித் தெரியுமா?

காலை 4.30 மணிக்குக் கண் விழிப்பு. காலைக் கடன்களை முடித்து நடக்கப் போகும்போது கடிகாரம் சரியாக 4.45 காட்டும். இரண்டு மணிநேர நடை. 6.45 க்குத் திரும்பி வந்து 45 நிமிடங்கள் பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் படிப்பார். பகவத் கீதை சுலோகங்கள் சொல்லுவார். பிறகு குளியல். தியானம். பழங்கள், காய்கறிகள் எனச் சிற்றுண்டி. குடும்பத்தோடு 30 நிமிடங்கள். அவர்களோடு பொது விவகாரங்கள் பேசுவார். ஒரு மணி நேரம் பத்திரிகைகள், அலுவலகப் பேப்பர்கள் படிப்பார். தம் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அன்றைய நிலவரங்களை அறிந்துகொள்வார்.

பத்து மணிக்கு ஆபீஸ். சுறுசுறுப்பாக வேலை. 12.30 - க்கு அதிகாரிகளோடு லஞ்ச். பின் மூன்று மணி நேரம் அலுவலகத்தில் வேலை. வீட்டுக்கு வந்து ஓய்வெடுப்பார். மாலை ஆறு முதல் ஏழு வரை நடை. 7.30 - க்கு இரவு உணவு. அப்போது வீட்டின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து சாப்பிட்டேயாக வேண்டும். 8.30 - க்குப் படுக்கையறைக்குப் போய்ப் புத்தகங்கள் படிப்பார். 9 மணிக்குத் தூங்கிவிடுவார். எந்த வெளி நிகழ்ச்சிகளுக்காகவும் தன் நேர அட்டவணையை மாற்றிக்கொள்ளமாட்டார்.

வாழ்நாள் முழுவதும் ராணுவத் தனமான இந்தக் கட்டுப்பாட்டை பிர்லா கடைப்பிடித்தார். ஒரே ஒர் நாள் மட்டும்தான் இந்த நெறிமுறையை அவர் விடவேண்டி வந்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவருக்கு இரவு விருந்து அளித்தார். அதில் கலந்துகொண்ட பிர்லா அன்று மட்டும், தன் இரவு உணவு நேரத்தையும், தூங்கும் நேரத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது.

நேரத்தில் மட்டுமல்ல, பணத்திலும் பிர்லா படு சிக்கனம்தான். தன் மகன் பசந்த்குமாருக்கு அவர் அடிக்கடி தந்த அறிவுரை, ‘அதிகம் செலவிடாதே. பணத்தைக் கேளிக்கைகளில் வீணாக்காதே.’

பிர்லாவின் பேரன் ஆதித்ய பிர்லா அமெரிக்கா எம்.ஐ.டி இல் படிக்கப் போனார். அப்போது பிர்லா பேரனுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு பகுதி: சைவ உணவு மட்டுமே சாப்பிடு. ஒருபோதும் மது அருந்தாதே, புகை பிடிக்காதே. அதிகாலையில் எழுந்திரு. சீக்கிரம் தூங்கப் போ. இளவயதில் திருமணம் செய்துகொள். அறையை விட்டு வெளியே போகும்போது, மறக்காமல் விளக்கை அணைத்துவிட்டுப் போ. நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடி. தினமும் நடைப் பயிற்சி மேற்கொள். குடும்பத்தோடு எப்போதும் தொடர்பில் இரு. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆடம்பரச் செலவு செய்யாதே.

இந்தியாவின் மாபெரும் பணக்காரரின் வார்த்தைகள் இவை என்றால் நம்ப முடிகிறதா?

நாம் மனப்பாடம் செய்யத் தகுதியான சில பிர்லாவின் வைரவரிகள்;

தவறு செய்துவிட்டீர்களா? அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டீர்களானால், அந்தத் தவறு ஒரு வரம்: இல்லையென்றால்? அது சாபம். நாளைக்குச் செய்யவேண்டிய காரியங்களை இன்றே செய்யுங்கள். இன்று செய்யவேண்டிய காரியங்களை இப்போதே செய்யுங்கள். சீக்கிரம் தூங்குங்கள். அதிகாலை எழுந்திருங்கள். செல்வத்தையும், அறிவையும் வளர்க்கும் வழி இது. தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கிறவன் ஒன்றுமே தெரியாதவன். வாழ்க்கை ஒரு பாற்கடல். கடையக் கடையத்தான், அதிக வெண்ணெய் கிடைக்கும்.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x