Published : 05 Dec 2022 11:30 AM
Last Updated : 05 Dec 2022 11:30 AM
கோவை: கோவையில் ஹோட்டல், கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சமையல் கூடங்களுக்கு தேவையான பலவகையான சமையல் உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சமையல் உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு கோவையில் இருந்து மாதந்தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சமையல் உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: டில்டிங் கிரைண்டர், காய்கறிகள், வெங்காயம் வெட்டும் இயந்திரங்கள், உருளைக்கிழக்கு தோல் உரிக்கும் இயந்திரம், தேங்காய் துருவல் உள்ளிட்ட பல வகையான சமையல் உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கல்லூரி விடுதிகளுக்கு அதிகளவு உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
வளைகுடா நாடுகளில் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடங்களில், தொழிலாளர்களுக்காக தற்காலிக சமையல் கூடங்கள் நிறுவப்படுகின்றன. அதற்கு தேவையான உபகரணங்களுக்கு கோவையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கட்டுமான திட்டங்கள் முடிந்த பிறகு, அங்கு பயன்படுத்தப்பட்ட சமையல் உபகரணங்கள் கழிவுபொருட்களாக (ஸ்கிராப்) கருதப்படும். ஒவ்வொரு கட்டுமான திட்டத்துக்கும் தற்காலிக சமையல் கூடங்கள் புதிதாக அமைக்கப்படும். இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு தொடர்ந்து பணி ஆணைகள் கிடைக்கின்றன.
பெரும்பாலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு உபகரணங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையில் இருந்து சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுக நகரங்களுக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து கொள்கலன்கள் உதவியுடன் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாதந்தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT