

புதுடெல்லி: இந்தியாவின் அதிக சந்தை மதிப்பு கொண்ட 500 நிறுவனங்களின் பட்டியலை ஹுரூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடம் பிடித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.17.25 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பைவிட ரூ.6 லட்சம் கோடி அதிகம் ஆகும். டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.11.68 லட்சம் கோடியாகும். மூன்றாம் இடத்தில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கியின் மதிப்பு ரூ.8.33 லட்சம் கோடியாகும்.
4-வது இடத்தில் இன்போசிஸ் (ரூ.6.46 லட்சம் கோடி), 5-வது இடத்தில் ஐசிஐசிஐ பேங்க் (ரூ.6.33 லட்சம் கோடி), 6-வது இடத்தில் பார்தி ஏர்டெல் (ரூ.4.89 லட்சம் கோடி), 7-வது இடத்தில் ஹெச்டிஎப்சி (ரூ.4.48 லட்சம் கோடி), 8-வது இடத்தில் ஐடிசி (ரூ.4.32 லட்சம் கோடி), 9-வது இடத்தில் அதானி டோட்டல் கேஸ் (ரூ.3.96 லட்சம் கோடி), 10-வது இடத்தில் அதானி எண்டர்பிரைஸஸ் (ரூ.3.81 லட்சம் கோடி) உள்ளன.
இந்தப் பட்டியலில் ரூ.6000 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட 500 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.226 லட்சம் கோடியாகும். இது இந்தியாவின் ஜிடிபி மதிப்பில் 29 சதவீதம் ஆகும். இந்நிறுவனங்களில் 70 சதவீதம் குடும்ப நிறுவனங்கள் என்று ஹுருன் இந்தியா தெரிவித்துள்ளது.
எரிசத்தி, சில்லறை வணிகம், விடுதி மற்றும் நுகர்வோர் பொருள்கள் ஆகிய துறைகள் அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகவும் மென்பொருள் மற்றும் சேவைத் துறை சென்ற ஆண்டில் ரூ.6 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் ஹுருன் இந்தியா குறிப்பிட்டுள்ளது.