Published : 02 Dec 2022 06:45 AM
Last Updated : 02 Dec 2022 06:45 AM

சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை தொடக்கம்

புதுடெல்லி: சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை சோதனை அடிப்படையில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நான்கு நகரங்களில் நேற்று தொடங்கப்பட்டது.

காகித, கிரிப்டோ கரன்சிகளுக்கு மாற்றாக டிஜிட்டல் வழிமுறையிலான பணப் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதன் விளைவாக, தற்போது மத்திய வங்கி டிஜிட்டல் ரூபாய் (சிபிடிசி) அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் ரூபாய் டெல்லி, மும்பை, பெங்களூரு, புவனேஷ்வர் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் நேற்று முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த நான்கு நகரங்களிலும் டிஜிட்டல் ரூபாயை கையாளும் பொறுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி,யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனையை தொடங்கியுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இ-ரூபாய் எனப்படும் டிஜிட்டல் ரூபாய் காகித ரூபாயைப் போன்றே மதிப்புகளைக் கொண்டிருக்கும். வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் ரூபாயை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல்போனில் உள்ள டிஜிட்டல் வாலெட்டிலேயே சேமித்து வைக்க முடியும். தேவைப்படும்போது மற்றொரு நபருக்கு அல்லது கடைகளுக்கு கியூர்ஆர் கோடு மூலமாக வாலெட்டிலிருந்து டிஜிட்டல் ரூபாயை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்துவதால் கையில் ரொக்கத்தை வைத்து அலைய வேண்டியதில்லை. பணம் செலுத்தும் முறையில் டிஜிட்டல் ரூபாய் புதிய செயல்திறனை கொண்டு வரும் என்பதுடன், ரொக்கத்தை வங்கிகளிலிருந்து எடுத்து நிர்வகிக்கும் செயல்பாட்டு செலவினத்தையும் வெகுவாக குறைக்கும். மேலும், இது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தடையற்ற பணப்பட்டுவாடா சேவையினை உறுதி செய்யும்.

அதுமட்டுமின்றி, பண மோசடி,தீவிரவாத நிதியுதவி, வரி ஏய்ப்பு ஆகியவற்றுக்கு டிஜிட்டல் ரூபாய்முடிவுகட்டும் பிட்காயின், ஈதர்போன்ற அரசு அங்கீகாரமற்ற, பாதுகாப்பற்ற கிரிப்டோ கரன்சிகளின்பயன்பாட்டுக்கு மாற்றாக டிஜிட்டல்ரூபாய் பயன்பாடு இருக்கும்.

சோதனை அடிப்படையில் தற்போது சில்லறைப் பயன்பாட்டு உபயோகத்துக்கு வந்துள்ள டிஜிட்டல் ரூபாயின் நிறை குறைகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆய்வு செய்யும். அதன் பின்னர், அதில் காணப்படும் சிக்கல் மற்றும் குறைகள் களையப்பட்டு நாடு முழுவதும் டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டை ரிசர்வ் வங்கி விரிவுபடுத்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x