

தூத்துக்குடி: மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே உரம்' கொள்கை அடிப்படையில் நாட்டிலேயே முதல் நிறுவனமாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் 'பாரத் யூரியா' என்ற பெயரில் உரம் விநியோகத்தை நேற்று தொடங்கியது.
'ஒரே நாடு ஒரே உரம்' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், அரசின் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் அனைத்து உரங்களையும் 'பாரத்' என்ற ஒற்றை பெயரில் தான் சந்தைப்படுத்த வேண்டும். அதாவது பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் பொட்டாஷ், பாரத் காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் தான் உர நிறுவனங்கள் தங்கள் உரங்களை சந்தைப்படுத்த வேண்டும்.
மேலும் உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர், 'லோகோ' பிற தயாரிப்பு தொடர்பான தகவல்களை, உரப் பைகளில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் அடியில் தான் அச்சிட வேண்டும். மீதமுள்ள இடத்தில், பாரத் என்ற பெயர் மற்றும் பிரதமரின் பாரதிய ஜன் உர்வரக் பரியோஜனா திட்டத்தின் லோகோ இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கொள்கையின் அடிப்படையில் நாட்டிலேயே முதல் முதலாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் 'பாரத் யூரியா' உரம் விநியோகத்தை நேற்று தொடங்கியது. மத்திய அரசு அறிவுறுத்திய விவரங்கள் அச்சிடப்பட்ட உர மூட்டைகளில் ஸ்பிக் ஆலையில் தயாரிக்கப்பட்ட யூரியா பேக்கிங் செய்யப்பட்டு லாரிகளில் அனுப்பப்பட்டது. 'பாரத் யூரியா' உரம் விநியோகத்துக்கான முதல் லாரியை ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குநர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ஒரே நாடு ஒரே உரம்' கொள்கை அடிப்படையில் நாட்டிலேயே முதல் நிறுவனமாக ஸ்பிக் நிறுவனம் 'பாரத் யூரியா' என்ற பெயரில் உரம் விநியோகத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2,100 டன் யூரியா உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும். முதல் நாளில் 2100 டன் பாரத் யூரியா உரம் தமிழகத்தின் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த உரப்பைகளில் அரசு நிர்ணயம் செய்த தயாரிப்பு செலவு, அதிகபட்ச விற்பனை விலை, வரி மற்றும் மானியம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த கொள்கை அடிப்படையில் பாரத் யூரியா என்று அறியப்படும் ஸ்பிக் யூரியா தொடர்ந்து அதன் நைட்ரஜன் தரத்தை பராமரித்து பயிர்கள் செழித்து வளர உறுதுணை புரியும் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன், ஸ்பிக் நிறுவன தலைமை இயக்க அதிகாரி இ.பாலு, பொதுமேலாளர் செந்தில் நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.