

தேசிய பங்குச்சந்தையின் (என்.எஸ்இ.) தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா ராஜினாமா செய்திருக்கிறார். என்.எஸ்.இ. தொடக்கத்தில் இருந்தே பணிபுரிந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும், உடனடி யாக அவர் விலக விரும்புவதாக அறிவித்திருக்கிறார்.
குறுகிய காலம் பதவியில் தொடரவேண்டும் என என்.எஸ்.இ இயக்குநர் குழு கோரிக்கை விடுத்தபோதிலும் அவர் மறுத்துவிட்டார். 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவருடைய பதவி காலம் இருக்கிறது.
இது குறித்து அனுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் என்.எஸ்.இ பதில் அளிக்கவில்லை. விரைவில் முறையான அறிவிப்பு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஜே.ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஐபிஓ
நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட தேசிய பங்குச்சந்தையின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ), இன்னும் சில மாதங்களில் வெளி யாக இருக்கிற சூழ்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா ராஜினாமா செய்திருக்கிறார்.
1992-ம் ஆண்டு என்.எஸ்.இ தொடங்கப்பட்டது. அப்போதி லிருந்து பல முக்கியமான பொறுப்புகளை வகித்துவந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு வந்தார். அதற்கு முன்பு இணை நிர்வாக இயக்குநராக இருந்தார். சர்வதேச அளவில் பங்குச்சந்தை அமைப்புகளில் உயர் பதவிகளில் பணிபுரியும் பெண்களில் இவரும் ஒருவர். செபியின் வரைவு விதிமுறைகளை உருவாக்கியதில் இவரது பங்கு அளப்பரியது.