இன்ஃபோசிஸுக்கு புதிய தலைவரை தேடும் பணி தீவிரம்

இன்ஃபோசிஸுக்கு புதிய தலைவரை தேடும் பணி தீவிரம்
Updated on
1 min read

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸுக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியை(சிஇஓ) தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இப்போது தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள எஸ்.டி. சிபுலாலின் பதவிக் காலம் 2015, ஜனவரி 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்னரோ தன்னை அனைத்து பொறுப்பிலிருந்தும் விடுவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கெனவே தான் ஓய்வுக் காலத்தைவிட கூடுதலாக பணியிலிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே புதிதாக தலைவர் தேர்வு செய்யப்பட்டால், முன்னதாகவே தான் பதவியிலிருந்து வெளியேற தயாராகஇருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பதவிக்கு பொறுத்தமாக நிறுவனத்தில் பணியாற்றும் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, நிறுவனத்தின் இயக்குநர் குழு எகான் ஷென்டர் எனும் சர்வதேச நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது. வெளி நிறுவனங்களில் உள்ள தலைவர்களில் தலைமைப் பதவிக்கு உரியவர்களை அடையாளம் கண்டு தெரிவிக்குமாறு இந்நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உயர் பதவியிலிருந்தவர்கள் வெளியேறிய நிலையில் புதிதாக பொறுப்பேற்பவர், இனிமேலும் இதுபோல வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தக் கூடியவராக இருக்க வேண்டும்.

10800 கோடி டாலர் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக திகழும் இன்ஃபோசிஸில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் வெளியேறுவது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 9 பேர் வெளியேறியுள்ளனர். இந்நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு தலைவராக இருந்த அசோக்வெமூரி நிறுவனத்திலிருந்து வெளியேறி ஐ-கேட் நிறுவனத் தலைவராக சேர்ந்தார். தலைமை நிதிச் செயலராக இருந்த வி. பாலகிருஷ்ணன், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துவிட்டார்.

இவர்கள் தவிர பசப் பிரதான், ஸ்டீபன் பிராட், கார்த்திக் ஜெயராமன், ஹம்பர்டோ அன்ட்ரேட் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.

நிறுவனத்துக்கு என்.ஆர். நாராயணமூர்த்தி திரும்ப வந்ததால் இவர்கள் வெளியேறியதாக ஒரு சிலர் கூறினர். இருப்பினும் முக்கிய தலைவர்கள் வெளியேறினாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in