

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் வரி வருமானங்கள் உயர்ந்திருக்கின்றன. மறைமுக வரி வருமானம் 26.2 சதவீதமாகவும், நேரடி வரி வருமானம் 15.12 சதவீதமாகவும் உயர்ந்திருக்கின்றன.
இதுவரை மொத்த வரி வரு மானம் ரூ.9.64 லட்சம் கோடியாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வரி வருமானத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கில் இது 59 சதவீதமாகும். நடப்பு நிதி ஆண்டில் ரூ.16.26 லட்சம் கோடி வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. நேரடி வரி வருமானமான ரூ.8.47 லட்சம் கோடியும் (கடந்த வருடத்தை விட 12.64% உயர்வு), மறைமுக வரி வருமானமாக 7.79 லட்சம் கோடி (கடந்த வருடத்தை விட 10.8 % உயர்வு) திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதுவரை நேரடி வரி வருமானம் ரூ.4.12 லட்சம் கோடியாகும், மறைமுக வரி வருமானம் ரூ.5.52 லட்சம் கோடியும் வசூல் ஆகி இருக்கிறது. நேரடி வரி என்பது தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி ஆகும். மறைமுக வரி என்பது உற்பத்தி, சுங்க வரி மற்றும் சேவை வரியை உள்ளிட்டவை சேர்ந்தது ஆகும். ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் கார்ப்பரேட் வருமான வரி 11.2 உயர்ந்தும், தனிநபர் வரி 22.41 சதவீதம் உயர்ந்து (கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும்போது) இருக்கிறது.
உற்பத்தி வரி 43.5% உயர்ந்து ரூ. 2.43 லட்சம் கோடியாகவும், சேவை வரி 25.7% உயர்ந்து ரூ.1.60 லட்சம் கோடியாகவும், சுங்க வரி 5.6% உயர்ந்து ரூ.1.48 லட்சம் கோடியாக மறைமுக வரி வசூல் ஆகி இருக்கிறது.