

புதுடெல்லி: ரூ.7,000 கோடி மதிப்புள்ள தனது வணிகத்தை பார்த்துக்கொள்ள மகள் மறுத்துவிட்டதாக பிஸ்லரி வாட்டர் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சவுகான் வேதனை தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ரமேஷ் சவுகான், 60 ஆண்டு காலமாக தண்ணீரை விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். தம்ஸ்அப், கோல்டு ஸ்பாட், சித்ரா, மாசா, லிம்கா என பல்வேறு குளிர்பானங்களை அறிமுகப்படுத்தி, பின் அவற்றை கோகோ கோலா நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு விற்று வருவாய் ஈட்டியவரான இவர், பிஸ்லரி பிராண்டை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து வருகிறார்.
பிஸ்லரி நிறுவனத்தின் மதிப்பு 7 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2020-ல் ரூ.100 கோடி லாபமும், 2021ல் ரூ.95 கோடி லாபமும் ஈட்டி உள்ளது. இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக ரமேஷ் சவுகானின் ஒரே மகளான ஜெயந்தி சவுகான் உள்ளார். ஆடை வடிவமைப்பு தொடர்பான படிப்பை அமெரிக்காவில் படித்த இவர், நவநாகரிக ஆடைகளை விரும்பி அணியக் கூடியவராக அறியப்படுகிறார். இதேபோல், புகைப்படக் கலை மற்றும் நவீனமாக தோற்றம் அளிப்பது குறித்த கலை சார்ந்த படிப்பை லண்டனில் முடித்த ஜெயந்தி சவுகான், அது சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது இவருக்கு 37 வயதாகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய 82 வயதாகும் ரமேஷ் சவுகான், தனது பிஸ்லரி நிறுவனத்தைப் பார்த்துக்கொள்ள தற்போது யாரும் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தனது மகளுக்கு பிஸ்லரி வணிகத்தில் விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், தற்போது இருக்கும் நிர்வாகம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் உள்ள பணத்தை தண்ணீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் மறுசுழற்சி, தொண்டு போன்றவற்றுக்கு பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இவர் தனது பிஸ்லரி நிறுவனத்தை விற்க முன்வந்தபோது, அதனை வாங்க டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டியது. இது தொடர்பாக இரு தரப்பும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.