Published : 26 Nov 2022 04:20 PM
Last Updated : 26 Nov 2022 04:20 PM

கார்பன் மூலம் ரூ.1 கோடி வருவாய்: எப்படி ஈட்டுகிறது சென்னை மாநகராட்சி?

சென்னை: கார்பன் வாயிலாக ரூ.1 கோடி வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், பல திட்டங்களை ஆய்வு செய்து கார்பன் மூலம் வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் கார்பன் உமிழ்வை குறைப்பதின் ஒரு பகுதியாக ‘கார்பன் கிரெடிட்’ திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி சென்னை மாநகராட்சியை பசுமையாக்க செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்து 'கார்பன் கிரெடிட்' தயார் செய்யவதற்கான பணிகளை சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இதன்படி கார்பன் உமிழ்வை குறைக்கவும், கார்பன் பயன்பாட்டை குறைக்கும் 5 திட்டங்களை ஆய்வு செய்து கார்பன் கிரெடிட்டை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் தயார் செய்துள்ளது.

இதில் சென்னை மாநகராட்சியின் பல்வேறு கட்டிடங்களில் சோலார் பேனல் அமைத்த திட்டத்தின் மூலம் 7686, பயோ கேஸிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மூலம் 5118, சோடியம் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றிய திட்டங்களின் மூலம் 613, சைக்கிள் ஷேரிங் திட்டங்களின் மூலம் 86,805 என்று மொத்தம் 1 லட்சம் கார்பன் கிரெடிட்டுகள் கிடைத்துள்ளது.

இதில் சோலார் பேனல் திட்டத்தின் மூலம் ரூ.11.46 லட்சம், பயோ கேஸிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மூலம் ரூ.7.45 லட்சம், சோடியம் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றிய திட்டத்தின் மூலம் ரூ.89 ஆயிரம் , சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் மூலம் ரூ.44.35 லட்சம் என்று மொத்தம் 1 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்த்து திடக் கழிவு மேலாண்மை, விவசாயம் தொடர்பான திட்டங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், மின்சார வாகனம் உள்ளிட்ட திட்டங்களையும் சென்னை மாநகராட்சி ஆய்வு செய்ய உள்ளது.

இந்தியாவில் இந்தூர் மாநகரம் இந்த 'கார்பன் கிரெடிட்' முறையைச் செயல்படுத்தி வருவாய் ஈட்டி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக சென்னைதான் இந்த திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

எப்படி கிடைக்கிறது வருவாய்? - மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி குறிப்பிட்ட அளவுதான் கார்பனை வெளியேற்ற முடியும். இதைவிட அதிக அளவு கார்பனை வெளியேற்றினால் அதை உறிஞ்சுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்படி செயல்படுத்தவில்லை என்றால் இதுபோன்ற கார்பன் கிரெடிட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இதன்படி சென்னை மாநகராட்சியிடம் கார்பன் கிரெடிட்டை வாங்கி, அதற்கு ஈடான கார்பனை வெளியேற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் சென்னை மாநகராட்சி தன்னிடம் உள்ள கார்பன் கிரெடிட்டுகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x