

சென்னை: ஒரே சந்தா செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலமான 11 ஓடிடி சேவையை உள்ளடக்கிய தொகுப்பினை டிஷ் டிவியின் ‘வாட்சோ’ தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டி2எச், டிஷ் டிவி இந்தியாவின் சந்தைப்படுத்துதல், கார்ப்பரேட் தலைவர் சுகடோ பானர்ஜி கூறியதாவது: கரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் ஓவர் தி டாப் எனப்படும்ஓடிடி பயன்பாடு அசுர வளர்ச்சியடைந்தது. ஓவர்-தி-டாப் (ஓடிடி)மீடியா சேவை என்பது இணையம் வழியாக பார்வையாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் சேவையாகும்.
ஓடிடி பயன்பாடு தற்போது பரவலாகி வரும் நிலையில் அவற்றை ஒருங்கிணைத்து தரும்நடவடிக்கையில் டிஷ் டிவியின் வாட்சோ ஓடிடி தளம் ஈடுபட்டுள்ளது.
டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலைவ், லயன்ஸ்கேட் பிளே, ஹங்கமா பிளே, ஹோய்சோய், கிளிக், எபிக்ஆன், செளபால் மற்றும் ஓஹோ குஜராத்தி, வாட்சோ எக்ஸ்குளூசிவ் ஆகிய இந்த 11 ஓடிடிசேவைகளும் வாட்சோ ஓடிடி தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒரே சந்தாவை செலுத்துவதன் மூலம் இந்த 11 ஓடிடி சேவைகளையும் ஒரே தளத்தில் பெறமுடியும்.
இந்த 11 ஓடிடி தளங்களையும் தனித்தனியாக பார்க்க மாதக் கட்டணமாக ரூ.1,111 செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வாட்சோ தளத்தில் இதற்கான கட்டணம் ரூ.299-ஆக மட்டுமே இருக்கும்.
சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை சென்றடையும் வகையில் டிஜிட்டல் மூலமாக மட்டுமின்றி விற்பனையகங்கள் மூலமாகவும் இந்த ஓடிடி சேவையில் வாடிக்கையாளர்கள் எளிதாக இணைய முடியும். வாட்சோ தளத்தில் மேலும் பல ஓடிடி தளங்களை சேர்க்கும் வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனஅனைத்து மொழி வாரியான மண்டலங்களிலும் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அதிக சிரமமின்றி ஒரே சந்தாவில் அனைத்து ஓடிடி சேவைகளையும் ஒருங்கிணைத்து சிறந்த பொழுதுபோக்கை உருவாக்கி தருவதே நிறுவனத்தின் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.