

மும்பை: தண்ணீரை பாட்டிலுக்குள் அடைத்து விற்று வருகிறது பிஸ்லரி இன்டர்நேஷனல் நிறுவனம். இந்நிறுவனத்தை விற்பனை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அதன் தலைவர் ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் பணியை கடந்த 1965 வாக்கில் பிஸ்லரி நிறுவனம் முன்னெடுத்தது.1969 வாக்கில் இத்தாலிய நாட்டு உரிமையாளர் வசமிருந்து பார்லே குழுமத்தின் ஜெயந்திலால் சவுகான் அதனை வாங்கி இருந்தார். தொடர்ந்து தண்ணீருடன் சாப்ட் டிரிங்ஸ் விற்பனை தொடாங்கப்பட்டது. மாஸா, தம்ப்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்றவை இதில் அடங்கும்.
1993 வாக்கில் தண்ணீர் நீங்கலாக தன் வசம் இருந்த பிராண்டுகளை விற்பனை செய்தது பிஸ்லரி. இந்தியாவில் இருந்து பன்னாட்டு நிறுவனமாக அது வளர்ச்சி பெற்றது. அதனை ரமேஷ் சவுகான் நிறுவி இருந்தார். தொடர்ந்து தங்கள் வணிகத்தை விரிவு செய்யும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை பிஸ்லரி முன்னெடுத்தது.
வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் டோர் ஸ்டெப் டெலிவரி முயற்சியையும் பிஸ்லரி முன்னெடுத்தது. தற்போது வேறு பெயரில் சாப்ட் டிரிங்ஸ் விற்பனையையும் மேற்கொண்டு வருகிறது. சென்னை உட்பட இந்தியாவில் மட்டும் 135 உற்பத்திக் கூடங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. சுமார் 3000 விநியோகஸ்தர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆன்லைன் மூலமாகவும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்தான் பிஸ்லரி நிறுவனத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளது நிர்வாகம்.
“பிஸ்லரியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். அது தொடர்பாக நிறைய பேருடன் பேசி வருகிறோம். எனது மகள் ஜெயந்தி இந்த தொழிலை நிர்வகிக்க விரும்பாத காரணத்தால் விற்பனை செய்கிறோம்” என ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.
டாடா நிறுவனம் பிஸ்லரியை ரூ.7000 கோடிக்கு வாங்க முன்வந்ததாக தகவல். அப்படி எதுவும் இல்லை என அதனை மறுத்துள்ளார் ரமேஷ் சவுகான். தங்கள் நிறுவனத்தை வாங்க விரும்பும் நபர்களுடன் பேசி வருவதாகவும், அதில் டாடா நிறுவனமும் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.