2016-ம் ஆண்டில், 83 ஐபிஓ மூலம் ரூ.25 ஆயிரம் கோடி நிதி திரட்டல்

2016-ம் ஆண்டில், 83  ஐபிஓ மூலம் ரூ.25 ஆயிரம் கோடி நிதி திரட்டல்
Updated on
1 min read

இந்திய பங்குச் சந்தைகளில் 2016-ம் ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் 380 கோடி டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.25,840 கோடியாகும். 83 ஐபிஓ வெளியீடுகள் வெற்றியடைந்துள்ளன என்று யர்னஸ்ட் அண்ட் யங் அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய ஐபிஓ சந்தைக்கு 2016-ம் ஆண்டு சாதகமாக அமைந்திருந்ததாகவும், 83 ஐபிஓ வெளியீடுகள் மூலம் 380 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளதாகவும் ‘இ ஒய் குளோபல் ஐபிஓ -2016 (கியூ4)’ அறிக்கை தெரிவித்துள்ளது. இந்திய சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச நம்பிக்கை மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக ஐபிஓ வெற்றியடைந்துள்ளன என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை, மற்றும் எஸ்எம்இ போர்டு உள்ளிட்ட சந்தைகளின் ஐபிஓ வெளியீடுகளில், அக்டோபர்- டிசம்பர் காலாண்டு அடிப்படையிலான இந்த அறிக்கை இந்திய ஐபிஓ சந்தையின் ஏற்றமான போக்கை காட்டுவதாகவும், இந்த போக்கு அடுத்த ஆண்டும் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் முதலீட் டாளர்கள் மற்றும் தொழில்முனைவு நடவடிக்கைகளுக்கு 2016ம் ஆண்டு சவாலானதாக அமைந்தது. குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான குழப்பங்கள் நிலவிய ஆண்டாக இருந்தது. இதன் காரணமாக 2016 ஐபிஓ 16 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. முதலீடு திரட்டும் நடவடிக்கைகள் 33 சதவீதம் சரிந்து 13,200 கோடி டாலராக இருந்தது. நாடுகள் அளவில் ஒப்பிடும்போது இந்தியாவின் நிதி திரட்டல் நடவடிக்கை சிறப்பாக இருந்தது.

இந்தியாவின் பொருளாதார சீரமைப்பு நடவடிகைகள் காரணமாக முதலீட்டுக்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும், இதனால் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இ ஒய் அமைப்பின் இந்திய பங்குதாரர் பங்கஜ் சந்தா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in