Published : 22 Nov 2022 10:37 PM
Last Updated : 22 Nov 2022 10:37 PM
சென்னை: இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் வாங்க கடன் வழங்கும் நடைமுறையை ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஐடிஎஃப்சி வங்கியுடன் இணைந்து தொடங்கியுள்ளது.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்கு அதிகரிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் முக்கியப் பொது போக்குவரத்து முறைகளான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை மின்சார முறைக்கு மாற்றும் பணிகள் நடைபெறுகிறது. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்துகளுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் மாற்றப்பட்டு வருகிறது. ரயில்வே துறையை 100 சதவீதம் மின்மயமாக்கலை நோக்கி பயணித்து வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக அதிக அளவு மாசை ஏற்படுத்தும் தனிநபர் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே எரிபொருள் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு மாற்றாக தற்போது மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் வரத் தொடங்கி விட்டன. ஆனால், இந்த வாகனங்களின் விலை மிக அதிகமாக உள்ளதால், இந்த வாகனங்கள் வாங்குவதற்கு பொதுமக்களிடம் மிகுந்த தயக்கம் நிலவுகிறது.
எனவே, மின்சார வாகனங்கள் வாங்க வங்கிக் கடன் அளிக்க வேண்டும் சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி முன்னரிமைத் துறைக்கான கடன் வழிகாட்டுதல்களில் மின்சார வாகனங்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், 2025ம் ஆண்டுக்குள் ரூ.40,000 கோடிக்கும், 2030-ம் ஆண்டுக்குள் ரூ.3.7 லட்சம் கோடி அளவுக்கும் மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஆற்றலை இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மின்சார வாகனங்கள் வாங்க கடன் வழங்கும் திட்டத்தை ஐடிஎஃப்சி வங்கி, ஏத்தர் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கி உள்ளது. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் நிறுவனம், ஏத்தர் 450 எக்ஸ் அல்லது 450 பிளஸ் வாகனங்களை, ஐடிஎஃப்சி வங்கியுடன் இணைந்து 48 மாத இஎம்ஐ என்ற அடிப்படையில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், இதற்கு செயலாக்க கட்டணம் இல்லை என்றும் தங்கள் பழைய ஸ்கூட்டர்கள் அல்லது பைக்குகளை பூஜ்ஜிய முன்பணத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏத்தர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் எஸ்.போகேலா கூறுகையில், “ஐடிஎஃப்சி வங்கியுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சார வாகன நிதி திட்டம், நாட்டில் மின்சார இரு - சக்கர வாகனங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளிக்கும்” என்று தெரிவித்தார்.
ஐடிஎப்சி வாகன கடன்களின் வணிகத் தலைவர் ரிஷி காந்த் மிஸ்ரா கூறுகையில், "ஐடிஎஃப்சி வங்கி மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு நிதியுதவி செய்வதில் முன்னணியில் உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT