

ஒட்டன்சத்திரம்: இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு 80 சதவீதம் முருங்கை ஏற்றுமதி செய்யப்படுவதாக, ஒட்டன்சத்திரத்தில் நெதர்லாந்தை சேர்ந்த முருங்கை இறக்குமதியாளர் இலக்குமணன் ராமு தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரத்தில் வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி, பதப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. தோட்டக்கலை துணை இயக்குநர் பெருமாள்சாமி வரவேற்றார். ஆட்சியர் ச.விசாகன், திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, மூலனூர் வேளாண் பல்கலை. முன்னாள் விஞ்ஞானி சரவணன் கந்தசாமி, பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் முதன்மை செயல் அலுவலர் வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: முருங்கை அதிகளவில் சாகுபடி செய்யப்படும் திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், மதுரை, தேனி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை ஏற்றுமதி மண்டலமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் முருங்கைக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளது. எனவே ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து விவசாயிகள் முருங்கை சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஒன்றரை ஆண்டில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவக் குணம் வாய்ந்த கண்வலி கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய, தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நெதர்லாந்தை சேர்ந்த முருங்கை இறக்குமதியாளர் இலக்குமணன் ராமு பேசியதாவது: இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு 80 சதவீதம் முருங்கை ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் இருந்து முருங்கை விதைகளை வாங்கி ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் முருங்கை சாகுபடி செய்து முருங்கை பவுடர், முருங்கை இலை உள்ளிட்டவைகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. 2025-ம் ஆண்டில் முருங்கையின் சந்தை மதிப்பு ரூ.85 ஆயிரம் கோடியாக இருக்கும்.
உயர்தர முருங்கையில் இருந்து தயாரிக்கப்டும் பவுடர் 200 கிராம் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முருங்கை பவுடரின் நிறத்தை பொருத்து அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. முருங்கையில் உள்ள சத்துகளை பற்றி மக்களுக்கு தெரிவிக்க அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் முருங்கை தூதுவர்கள் உள்ளனர். இந்தியாவில் முருங்கை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சியை அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தரசு நன்றி கூறினார்.