

சென்னை: தமிழகத்தில் தற்போது ஜிஎஸ்டி வருவாய் ரூ.62 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தமிழகம், புதுச்சேரி ஜிஎஸ்டி மண்டல முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
சென்னை தொழில் வர்த்தக சபை (எம்சிசிஐ) சார்பில்,சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் வரவேற்புரை ஆற்றினார்.
கருத்தரங்கை தொடங்கி வைத்து மண்டலிகா னிவாஸ் பேசியதாவது: ஜிஎஸ்டி வருவாய் கடந்த 2017-ல் ரூ.80 ஆயிரம் கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடியாக இருந்தது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 28 சதவீதமாக உள்ளது. 2021 – 22-ம் நிதியாண்டு அக்டோபர் முடிவில் ரூ.48 ஆயிரம் கோடி வருவாய் வசூலானது. இது 2022 அக்டோபரில் ரூ.62 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையை நிறுவனங்களுக்கு திரும்ப வழங்க 60 நாட்கள் வரை ஆனது. நான் பொறுப்பேற்ற பிறகு இது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 14 ரீஃபண்ட் மட்டுமே நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை தொழில் வர்த்தக சபை ஜிஎஸ்டி கமிட்டி தலைவர் வைத்தீஸ்வரன், துணைத் தலைவர் கோபகுமார், செயலாளர் சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.