Published : 09 Jul 2014 09:57 PM
Last Updated : 09 Jul 2014 09:57 PM

சேவைத்துறை: அதிவேக வளர்ச்சியில் 2-ம் இடத்தில் இந்தியா

உலகில் சேவைத்துறையில் மிகவும் விரைவான வளர்ச்சி கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாளன்று பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். இதன்படி இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அதில், சேவைத்துறை தொடர்பாக வெளியான முக்கிய அம்சங்களாவன:

உலகில் சேவைத்துறையில் மிகவும் விரைவான வளர்ச்சி கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது. 2001 முதல் 2012 ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவின் ஆண்டு கூட்டு வளர்ச்சி வீதம் 9 சதவிதமாக இருந்தது. இதே காலத்தில் சீனாவின் வளர்ச்சி வீதம் 10.9 சதவிதமாகும்.

2012 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறை பிரிவில் முதல் 15 நாடுகளின் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பெற்றிருந்தது. இந்த காலகட்டத்தில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு 65.9 சதவீதமாகும். வேலை வாய்ப்பு 44 சதவீதமாகும். இந்தியாவில் இதே ஆண்டில் சேவைத்துறையின் பங்களிப்பு 56.9 சதவிதமாகவும், வேலை வாய்ப்பு 26.1 சதவிதமாக இருந்தன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

2013-14 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 57 சதவிதமாகும். இது 2000-2001 ஆம் ஆண்டைவிட 6 சதவிதம் கூடுதலாகும். இந்த ஆண்டில் வர்த்தகம், ஓட்டல்கள், விடுதிகள், போக்குவரத்து, சேமிப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி 3 சதவிதமாக குறைந்தபோதிலும் நிதி காப்பீடு நிலவர்த்தகம், வர்த்தகம் ஆகிய துறைகளின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்து 12.9 சதவிதத்தை எட்டியது.

அன்னிய நேரடி முதலீடு

2013-14 ஆம் ஆண்டு சேவைத்துறையில் அன்னிய நேரடி முதலீடு (கட்டுமானம் பணிகள் உட்பட 5 உயர் துறைகளில்) குறிப்பிடும்படியாக 37.6 சதவிதமாகக் குறைந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அன்னிய நேரடி முதலீட்டின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது. இதன் விளைவாக மொத்த நேரடி அன்னிய முதலீட்டில் இந்த 5 உயர் துறைகளின் பங்களிப்பு கிட்டதட்ட ஆறில் ஒரு பங்காக குறைந்தது.

ஏற்றுமதி

உலகளவில் சேவைத்துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு 0.6 சதவிதமாக இருந்த இந்த பங்களிப்பு 2013 ல் 3.3 சதவிதமாக அதிகரித்தது. இதை வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதத்தைவிட விரைவானதாகும். இந்தியாவின் சேவைத்துறையின் மொத்த ஏற்றுமதியில் மென்பொருள் சேவை ஏற்றுமதி 46 சதவிதமாக உள்ளது. இது 2013-14 ல் 5.4 சதவிதம் குறைந்தது. 12 சதவிதமாக இருந்த சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் வீழ்ச்சிக் காணப்பட்டது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x