Last Updated : 20 Jul, 2014 07:00 AM

 

Published : 20 Jul 2014 07:00 AM
Last Updated : 20 Jul 2014 07:00 AM

பணியாளர்களை நம்புகிறேன், வளர்ச்சி வசமாகிறது

தமிழகத்தின் மிகப் பிரபலமான கல்விக் குழுமங்களில் முன்னோடியானது அது. இக்குழுமத் தலைவரின் மகன் போக்குவரத்துத் தொழில் தொடங்க ஆசைப்பட்டு வங்கியை அணுகியபோது, இத்துறையில் முன் அனுபவம் கிடையாது என்று அவருக்குக் கடன் தர வங்கிகள் மறுத்துவிட்டன.

ஆரம்பத்தில் 2 பஸ்களைக் கொண்டு தொடங்கிய அந்நிறுவனம் இன்று 140 பஸ்களுடன் தென்னகம் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது. இன்று எத்தனை பஸ்கள் வாங்குவதற்கும் கடன் தர வங்கிகள் தயாராக நிற்கின்றன. அந்த நிறுவனம்தான் எஸ்ஆர்எம் டிரான்ஸ்போர்ட்.

எஸ்ஆர்எம் (ஸ்ரீராமசாமி மெமோரியல்) பல்கலைக் கழகத் தலைவர் பச்சமுத்துவின் மூத்த மகன் ரவி பச்சமுத்துவுக்குத்தான் ஆரம்ப காலத்தில் வங்கிகள் கடன் தர மறுத்துள்ளன. எப்போதும் பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என அவரைப் பார்க்க வரிசை கட்டி நின்றாலும் நமக்கு சிறிது நேரம் ஒதுக்கினார். இனி அவருடனான உரையாடலிலிருந்து…

ஆரம்பத்தில் எந்தெந்த தொழில்களில் ஈடுபட்டீர்கள்? அவற்றில் வெற்றி பெற்றீர்களா?

சிறிய வயதிலிருந்தே ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை கல்லூரி காலத்திலேயே செயல்படுத்தினேன். எருமை மாட்டு கொம்பிலிருந்து பட்டன்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டேன். இவற்றை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்தோம். வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற முதல் முயற்சியில் வெற்றி கிட்டியது. அடுத்து தோல் தொழிற்சாலையை ரூ. 5 கோடி முதலீட்டில் தொடங்கினேன் அதிலும் வெற்றி கிடைத்தது. ஆனால் கல்லூரி தொடங்கியபிறகு அதிலே முழு நேர கவனமும் சென்றது.

சிமென்ட் தொழிலைத் தொடங்கியதன் காரணம் ஏனோ?

கல்லூரி கட்டடம் கட்டும்போதே அரியலூர் சிமென்ட் ஆலைக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த ஆலையைப் பார்த்தபிறகு, சிமென்ட் ஆலை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. முதல் கட்டமாக கான்கிரீட் மிக்ஸிங் யூனிட் தொடங்கினேன். அடுத்து குளோபல் சிமென்ட் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹேமாத்திரி சிமென்ட் ஆலையை வாங்கினோம். நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த ஆலை இப்போது லாபமீட்டத் தொடங்கியுள்ளது. அடுத்தகட்டமாக இதை விரிவுபடுத்தும் திட்டமுள்ளது.

பஸ் போக்குவரத்தில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

பள்ளி நாள்களிலேயே குறுகிய கால பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பழக்கம் உண்டு. கோழி வளர்ப்பு பயிற்சி, ரேடியோ மெக்கானிசம், கால்நடை மருந்து பயிற்சி, வேளாண் துறை சார்ந்த பயிற்சி மற்றும் கார் பழுது பார்ப்பு போன்ற வகுப்புகளுக்கு சென்றதில் மோட்டார் தொழில் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுவனம் தொடங்க முடிவு செய்து அத்துறையில் இறங்கினோம்.

கல்லூரி விரிவாக்கப் பணிகள் எந்த அளவில் உள்ளன?

ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை உள்ளடக்கிய பல்கலை செயல்படுகிறது. இதேபோல சிக்கிமிலும் தொடங்கியுள்ளோம். அதிக எண்ணிக்கையில் பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன்.

வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தும் எண்ணம் இல்லையா?

பல நாடுகளிலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இப்போதைக்கு மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) உள்ளிட்ட 45 வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

கல்விப் பணியில் நீங்கள் சாதித்ததாக எதைக் கருதுகிறீர்கள்?

இதில் சாதனை என்று எதை வரையறுப்பது. மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறோம். சிறந்த மாணவர்களாக வெளியேறும் மாணவர்கள் கல்லூரிக்கு பெருமை தேடித் தருகின்றனர். இதுதான் கல்வி ஸ்தாபனம் வளர்ச்சியடைய காரணமாகிறது.

உங்களது பொழுது போக்கு?

வேலைதான் பொழுதுபோக்கு. வேலை செய்வது மிகவும் பிடிக்கும். எதையும் நிர்பந்தம் அல்லது அழுத்தம் காரணமாக செய்வது எப்போதும் பிடிக்காது. பிடித்ததை செய்யவேண்டும். அதுதான் நிறைவைத் தருகிறது என்பதை உணர்ந்துள்ளேன்.

மோட்டார் தொழிலில் தீராக் காதல் உண்டு. இதுவரையில் 20 கேரவன்களை வடிவமைத்துள்ளேன். எஸ்ஆர்எம் ஆட்டோ டெக் பிரிவுக்குச் சென்று நானே களத்தில் இறங்கி வடிவமைக்கத் தொடங்கி விடுவேன்.

ஹோட்டல், மருத்துவமனை, கல்லூரி, போக்குவரத்து என அனைத்தையும் எப்படி நிர்வகிக்க முடிகிறது?

ஊழியர்களை நம்புகிறேன். அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. நான் தேர்வு செய்யும் நபர்கள் எனது தேவையை உள்வாங்கி செயல்படுத்துகின்றனர். இதனால் அனைத்து நிர்வாகமும் தொய்வின்றி செயல்படுகிறது.

உங்களது வெற்றிக்கு எது காரணம் என்று நினைக்கிறீர்கள்?

தொடங்கிய தொழில்கள் அனைத்துமே சிறிய அளவில்தான் தொடங்கி படிப்படியாக விரிவுபடுத்தினேன். அனைத்தையுமே லாப, நஷ்ட கணக்கோடு பார்க்க முடியாது. சில தொழில்கள் அதிக லாபம் தரும். சில தொழில்கள் குறைந்த லாபமாக இருந்தாலும் மனதுக்கு அதிக நிறைவைத் தரும். எனது ஊழியர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். இவைதான் எனது வளர்ச்சிக்குக் காரணம்.

அப்பா வழியில் கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கிறீர்கள், அதைப்போல அரசியலில் ஈடுபடும் ஆசை உண்டா?

இப்போதைக்கு இல்லை, எதிர்காலத்தில் ஏற்படுமா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது.

உங்களது ஆசை அல்லது லட்சியம் என்ன?

மருத்துவமனைகளை அதிக எண்ணிக்கையில் தொடங்கும் திட்டமுள்ளது. சிறிய அளவிலான மருத்துவமனைகளை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக சிறந்த தொழிலதிபராக இருந்தாலே போதும்.

எம். ரமேஷ்- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x