மெட்டா நிறுவன இந்தியத் தலைவர் சந்தியா தேவநாதன் | யார் இவர்?

சந்தியா தேவநாதன் |  கோப்புப்படம்
சந்தியா தேவநாதன் | கோப்புப்படம்
Updated on
1 min read

மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் அந்தப் பொறுப்பை கவனித்து வந்த அஜித் மோகன் விலகிய நிலையில், அவர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 1 முதல் அவர் இந்தப் பொறுப்பை கவனிப்பார் எனத் தெரிகிறது. இதனை மெட்டா நிறுவனம் அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளது.

உலக அளவில் இயங்கி வரும் நிறுவனங்கள் சில ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களின் தாய் நிறுவனமான மெட்டாவும் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் பொதுக் கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் போன்றோர் தங்களது பொறுப்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் சந்தியா பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

யார் இவர்? - கடந்த 2016 வாக்கில்தான் மெட்டா நிறுவனத்தில் அவர் இணைந்துள்ளார். தொடக்கத்தில் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் பகுதியில் வணிகம் மற்றும் குழு கட்டமைப்பு பணிகளுக்கு உதவி வந்துள்ளார். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மெட்டாவின் இ-காமர்ஸ் வளர்ச்சியிலும் பணியாற்றி உள்ளார்.

ஆந்திர பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் பி.டெக் பட்டம் முடித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் 1998-2000 காலக்கட்டத்தில் எம்பிஏ முதுகலை பட்டம் படித்துள்ளார். 2014-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் லீடர்ஷிப் கோர்ஸ் முடித்துள்ளார்.

வங்கி, பேமென்ட்ஸ் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து சர்வதேச அளவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முதலீடு சார்ந்த பணிகளில் இயங்கி வரும் சிட்டி நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அதன்பிறகு சுமார் 6 ஆண்டு காலம் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் சில்லறை வர்த்தகப் பிரிவில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.

மெட்டா நிறுவனத்தில் தற்போது ஆசிய பசிபிக் கேமிங் லீடாக இயங்கி வருகிறார். கடந்த 2020 முதல் இந்தப் பணியை அவர் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி 1 முதல் இந்தியா வருகை தந்து புதிய பொறுப்பை அவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்கள் நிறுவனத்திற்கு வருவாயை பெருக்குவதற்கான வேலைகளை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in