

புதுடெல்லி: 2021-22-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி (ஐ.டி.) ரிட்டர்ன் தாக்கல் செய்ய தனி நபர்களுக்கு கடந்த ஜூலை 31 வரையிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நவ. 7 வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள், டிசம்பர் 31-க்குள் அபராதத்துடன் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுவரையில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரையில் 6.85 கோடி விண்ணப்பங்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. டிசம்பர் 31 வரையில் அவகாசம் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார்.
2020-21-ம் ஆண்டுக்கு 7.14 கோடி வருமான வரி ரிட்டர்ன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டில் ரூ.14.20 லட்சம் கோடி நேரடி வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. நவம்பர் 10-ம் தேதி நிலவரப்படி வசூல் ரூ.10.54 லட்சம் கோடியாக உள்ளது.