

ரூபாய் மதிப்பு செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பால் மூன் றாவது நாளாக நேற்றும் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் காணப்பட்டன.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 5.94 புள்ளிகள் சரிந்து 26298.69 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீடு 3.15 புள்ளிகள் உயர்ந்து 8111.60 புள்ளிகளுடனும் நிறைவடைந் தன.
நேற்று காலை நேர வர்த்தகத்தில் பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது. சில்லரை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.2 சதவீதம் குறைந்திருப்பது மற்றும் டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. நிப்டி 8200 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. அதுமட்டுமல்லாமல் நேற்று காலை ஆசிய பங்குச்சந்தைகள் உயர்ந்து காணப்பட்டதாலும் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. ஆனால் வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 6 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது.
சமீபத்தில் மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதன் விளைவு பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நுகர்வோர் சாதனங்கள், ஹெல்த் கேர், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் பங்குகள் சரிவைக் கண்டன. மாறாக ஐ.டி, ஆட்டோ துறை பங்குகள் உயர்வை கண்டன.
அதிகபட்சமாக நேற்றைய வர்த்தகத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 5.04 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது. அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 3.02 சதவீதம் சரிந்து முடிவடைந்தது.