

ஓரிகன்: எதிர்வரும் ஞாயிறன்று கால்பந்து உலகக் கோப்பை திருவிழா கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. இந்த முறை எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் நிலவுகிறது. வழக்கம் போலவே சில பேவரைட் அணிகள் கோப்பையை வெல்லும் என்ற விவாதங்களும் ரசிகர்கள் மத்தியில் தீயாய் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நைக் நிறுவனம் உலகக் கோப்பையை முன்னிட்டு ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
‘GOAT Experiment’ எனும் தலைப்பில் உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு இடையில் நடக்கும் பலப்பரீட்சை போல இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனமும் பெற்று வருகிறது.
ஆய்வுக் கூடத்தில் யார் சிறந்தவர் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக ஆய்வறிஞர்கள் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே மற்றும் பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோவுக்கும் இடையே பரீட்சை வைக்கிறார்கள். தொடர்ந்து பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரொனால்டோ நசாரியோ இணைகிறார். பின்னர் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் வருகிறார்.
இவர்களுடன் இந்நாள், முன்னாள் கால்பந்து வீரர்கள் இணைகின்றனர். மகளிர் கால்பந்து நட்சத்திரங்களும் தலை காட்டி செல்கின்றனர். அநீம் கதாப்பாத்திரம் ஒன்றும் வருகிறது. பெல்ஜியம் வீரர் கெவின் டி ப்ரூய்னும் வருகிறார். இறுதியில் காலம் முன்னோக்கி செல்கிறது. சுமார் 3.38 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த வீடியோ.