

தென்காசி: ட்விட்டர், மெட்டா, அமேசான் என வரிசையாக முன்னணி நிறுவனங்கள் சர்வதேச அளவில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை ஆயிரக்கணக்கில் மேற்கொண்டு வருகிறது. இது பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அது குறித்து பேசி உள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு இந்தியர்களும் ஆளாகி உள்ளனர். இந்த நடவடிக்கை சிலிக்கான் வேலி மாடல் எனவும் சொல்லி உள்ளார் அவர். அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன.
“இதனை சிலிக்கான் வேலி மாடல் என சொல்வார்கள். இந்த சுழற்சி முறை ஏற்றம் மற்றும் இறக்கம் நிறைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த முறை அதனால் இந்தியாவுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தான் அது குறித்து பேசி வருகிறோம்.
நாம் சிலிக்கான் வேலியில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதனை இங்கு செயல்படுத்த முடியாது. நாம் நமது நிறுவனங்களை வேறு வகையில் கட்டமைக்க வேண்டும். திறன் படைத்த ஊழியர்களை பணிக்குச் சேர்ப்பார்கள், அவர்கள் மூலம் வளர்ச்சி பெறுவார்கள். சிக்கல் என்றால் அவர்களைப் பணியில் இருந்து நீக்குவார்கள். இதுதான் அந்த மாடல். ஆனால் இது இங்கு நமக்கு செட் ஆகாத ஒன்று. இந்திய நிறுவனங்கள் சுய மாடல்களை உருவாக்க வேண்டும்.
எங்கள் நிறுவனம் அப்படித்தான் இயங்கி வருகிறது. கிராமப்புற இளைஞர்களை மெயின் ஸ்ட்ரீமுக்கு கொண்டு வர வேண்டும். இதை நாங்கள் உருவாக்க முயன்றபோது, முடியுமா என்ற கேள்விகள் இருந்தது. இப்போது அது சாத்தியமாகி உள்ளது” என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.