

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்தில் எல்லாம் சரியாகும் வரை அதன் தலைமையகத்தில் தான் தனக்கு தூக்கம் என தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். உலகின் முதல் நிலை பணக்காரர் ஆன அவர் இப்போது ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளார். அதோடு பல்வேறு மாற்றங்களை நிர்வாக ரீதியாவும், தொழில்நுட்ப ரீதியாகவும், வணிக நோக்கிலும் அவர் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாள் முதல் இப்போது வரையில் நாள்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் செய்திகளாகி வருகிறது. ட்விட்டரில் வாரத்திற்கு 80 மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என அவர் அறிவித்திருந்தார். அதோடு சிலர் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் எனவும் சொல்லப்பட்டு உள்ளதாக தகவல்.
“நான் ட்விட்டர் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் தான் இருக்கிறேன். அனைத்தும் சரியாகும் வரை இங்கு வேலைகளை கவனிப்பேன். தூங்கவும் செய்வேன்” என ட்வீட் செய்துள்ளார் மஸ்க். அவர் ட்விட்டர் நிறுவனத்திற்குள் கை கழுவும் தொட்டி உடன் முதல் முறையாக நுழைந்திருந்தார்
ஊழியர்கள் பணியில் வலியை உணரும் போதெல்லாம், அதைவிட கூடுதலான வலியை தானும் அனுபவிக்க வேண்டும் என விரும்புவதாக முன்னர் அவர் தெரிவித்திருந்தார்.
"எனக்கென சொந்தமாக ஓர் இடம் கூட இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் எனது நண்பர்களின் வீடுகளில்தான் தங்கி வருகிறேன். டெஸ்லா நிறுவன பணி நிமித்தமாக நான் சென்றாலும், அந்த இடங்களில் அமைந்துள்ள நண்பர்களின் மாற்று அறையில் தங்குவேன்.
எனது தனிப்பட்ட செலவுக்காக ஆண்டுதோறும் பில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவு செய்தால், எனக்கு அது சிக்கலை கொடுக்கலாம். ஆனால், அதற்காக நான் இப்படி செய்யவில்லை. நான் சொந்தமாக தனி ஜெட் விமானம் வைத்துள்ளேன். அது இல்லையெனில் எனது வேலைகள் நடக்காது” என கடந்த ஏப்ரல் வாக்கில் மஸ்க் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.