

கோவை: கழிவுப் பஞ்சு விலை அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடம் இருந்து மூலப்பொருட்களை பெற்று இந்தியாவுக்கே அதிக லாபத்துடன் ஐரோப்பிய நாடுகள் ‘டயபர்’ ஏற்றுமதி செய்வதாகவும் தொழில்துறையினர் கூறுகின்றனர். நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சு மூலம்நூல் உற்பத்தி செய்யும் பணி, ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 600 ஓபன் எண்ட் மில்கள் செயல்படுகின்றன. கழிவுப் பஞ்சு விலை உயர்வால் ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுப் பஞ்சுஅதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதும் விலை உயர்வுக்கு முக்கியகாரணமாக கூறும் தொழில் துறையினர் கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஓபன்எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியது: பஞ்சு விலை கடந்த மே மாதத்தில் வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. ஒரு கேண்டி (356 கிலோ)ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 31வரை பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கையால் தற்போது ஒரு கேண்டி ரூ.68 ஆயிரமாக குறைந்துள்ளது. இருப்பினும் நூற்பாலைகள் கழிவுப் பஞ்சு விலையை குறைக்கவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கிலோ கழிவுப் பஞ்சு ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது ரூ.140-ஆக உயர்ந்துள்ளது. கழிவுப் பஞ்சுக்கு தேவை அதிகரித்துள்ளதும், இருப்பு குறைவாக உள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். ஜவுளி சங்கிலித் தொடரிலுள்ள ஓபன் எண்ட் மில்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நூற்பாலை நிர்வாகத்தினர் ஒரு கிலோ கழிவுப் பஞ்சை ரூ.120-க்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும்.
தவிர இந்தியாவில் இருந்துஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு கழிவுப் பஞ்சு அதிகஅளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ‘டயபர்’ செய்வதற்கும் அந்நாடுகளில் கரன்சி நோட்டு அச்சிடுவதற்கும் இந்தியாவின் கழிவுப் பஞ்சுதான் பயன்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் இருந்து ஒரு கிலோ கழிவுப் பஞ்சை ரூ.100-க்கு வாங்கும் வெளிநாடுகள் ‘டயபர்’ செய்து ரூ.800-க்கு நமக்கே ஏற்றுமதி செய்கின்றன. ஒரு கிலோவுக்கு ரூ.700 லாபம் சம்பாதித்து வருகின்றனர். மறுபுறம் இந்தியாவில் உள்ள ஓபன் எண்ட் மில்கள், கழிவுப் பஞ்சு தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மத்திய அரசு கழிவுப் பஞ்சுஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். நூற்பாலைகளும் கழிவுப் பஞ்சு விலையை குறைக்கவேண்டும். இதுவே இப்பிரச்சினைக்கு தீர்வாகும் என்றார்.