

மைக்ரோசாப்ட் நிறுவனம் 18 ஆயிரம் ஊழியர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்நிறுவனத்தில் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய ஆள்குறைப்பு பணி இதுவாகும்.
இந்தியாவில் ஆள்குறைப்பு தாக்கம் குறைவாக இருக்கும் என்ற கருதப்படுகிறது. 40 ஆண்டுகளில் இந்நிறுவனம் மேற்கொள்ளும் அதிகபட்ச ஆள்குறைப்பு இதுவாகும். நோக்கியா நிறுவனத்தை வாங்கியுள்ள இந்நிறுவனம் அதில் 12,500 பேரை வீட்டுக்கு அனுப்ப உள்ளது. 2013 ஜூன் 30 நிலவரப்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் 58 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.
41 ஆயிரம் பேர் பிற நாடுகளில் உள்ள இந்நிறுவன கிளைகளில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் மட்டும் நோக்கியா பணியாளர்கள் உள்பட மொத்தம் 6,500 பேர் உள்ளனர். ஆள்குறைப்பு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்காது என்று அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.