

சென்னை: வாகன பராமரிப்பு, சர்வீஸ், உதிரிபாகங்கள் என வாகனத் துறை தொடர்பாக ‘ஆட்டோசெர்வ்’ (Autoserve) என்ற பெயரில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சி நடத்தி வருகிறது. வாகனத் துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் காட்சிப்படுத்தும். இந்த ஆண்டு கண்காட்சி நேற்று சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது.
10-வது ஆண்டு ‘ஆட்டோசெர்வ்’ கண்காட்சியை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது: இந்திய அளவில் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவின் நகர்மயமான மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. சாலை வசதி, பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு மூலமே இந்த வளர்ச்சி சாத்தியமானது. தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்ட மைப்பானது அனைவராலும் எளிதாக பயன்படுத்தக் கூடியது. பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை பொதுப் போக்குவரத்து இணைக்கிறது. ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் போக்குவரத்துக் கட்டமைப்பு மிக முக்கியமானது.
போக்குவரத்துத் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. கார்பன் வெளி யேற்றத்தைக் கட்டுப்படுத்த மின் வாகனங்கள் வாங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஹைட்ரஜன் எரிபொருள் தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் பேசினார். மூன்று நாட்கள் (நவம்பர் 11 -13) நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 100- க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.