Published : 12 Nov 2022 06:45 AM
Last Updated : 12 Nov 2022 06:45 AM

அறக்கட்டளைகள் வருமான வரி விலக்கு பெறுவதற்கான படிவம் 10 - ஏ பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அறக்கட்டளைகள், வருமானவரி விலக்கு பெறுவதற்கான படிவம் 10ஏ-வை பதிவு செய்ய நவ. 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி சட்டத்தின்கீழ் பதிவாகியுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம் 1961 பிரிவு 12ஏபி / 80ஜி / 10(23சி) / 35(1)ன்கீழ் பதிவு, அங்கீகாரம் பெறுவதில், நிதி சட்டம் 2020 மற்றும் 2021-ல் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்புதிய நடைமுறைகளின்படி, வருமானவரி சட்டத்தின்கீழ் ஏற்கெனவே பதிவாகியுள்ள அறக்கட்டளைகள், கடந்த மார்ச் 31-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக மின்னணு வழியே படிவம் 10ஏ-வை கட்டாயம் தாக்கல் செய்து மறுபதிவு செய்திருக்க வேண்டும்.

அவ்வாறு மறுபதிவு செய்யத் தவறிய அறக்கட்டளைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு இருக்கும் வரிவிலக்கு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, புதிய நடைமுறைமுக்கு மாறுவதில் சில இடையூறுகள் காரணமாக பல அறக்கட்டளைகள் மார்ச் 31-ம் தேதிக்குள் மறுபதிவு செய்வதற்கான படிவத்தை தாக்கல் செய்ய இயலவில்லை என மத்திய நேரடி வரி வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது இதையடுத்து. அறக்கட்டளைகளின் இன்னல்களை களையும் பொருட்டு, படிவம் 10ஏ தாக்கல் செய்ய வசதியாக வரும் 25-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என வருமான வரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x